பட்டாசு ஆலை விபத்தில் பலி 5 ஆக அதிகரிப்பு!

விருதுநகர்:

சிவகாசி அருகே இரு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை ஐந்தாக  உயர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த ராமுத்தேவன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.  இந்நிலையில் நேற்று தொழிலாளர்கள் பட்டாசுகளை அறையில் இருந்து லாரியில் ஏற்றும்போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகளை லாரியில் ஏற்றிய சேகர், ரவி என்ற இரண்டு தொழிலாளர்கள் உடல் கருகி பலியானார்கள்.  பட்டாசுகள் ஏற்றப்பட்ட லாரியும் எரிந்து எலும்புக்கூடானது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீ மேலும் பரவாமல் தடுத்தனர். சம்பவ இடத்தில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் வந்து  விசாரணை நடத்தினர்.

பாதுகாப்பு குறைபாடு காரணமாக விபத்து நேரிட்டதாக  வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து சிவகாசி அருகே காக்கிவாடான்பட்டியில் மற்றொரு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.  மேலும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் முத்துமாரி என்ற பெண் சிகிச்சைபலனின்றி இன்று உயிரிழந்தார்.