மதுரை,

துரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் நேற்று இரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் ஏராளமான கடைகள் எரிந்து நாசமாயின.

இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏதேனும் தெய்வ குற்றம் ஏற்பட்டுள்ளதோ என்று பேசத்தொடங்கினர்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நேற்று இரவு வழக்கம் போல பூஜைகள் முடிந்து  நடை சாத்தப்பட்டு, வெளிப்பிரகார கதவுகள் அடைக்கப்பட்டன.

இந்நிலையில், கிழக்கு கோபுரம் அருகே, ஆயிரம்கால் மண்டபம் பகுதியில் திடீரென பெருமளவில் புகை வெளியேறியது.  சற்று நேரத்தில் அந்த பகுதியில் இருந்துவிளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் இருந்து தீ மளமளவென பற்றி எரிய  தொடங்கி அருகிலுள்ள மற்ற கடைகளுக்கும் பரவ தொடங்கியது.

சுமார் 30 கடைகளுக்கு தீ பரவி எரிய தொடங்கியதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும்,10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதி குறுகலான பதி என்பதாலும், அனைத்துகடைகளிலும் பெரும்பாலாம் பிளாஸ்டிக் பொருட்களே விற்பனை செய்து வந்தால்,  தீ கட்டுக்கடங்காமல் கொளுந்துவிட்டு எரிந்தது.

இதன் காரணமாக தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முடியாமல் அவர்கள் திணறினர்.

சுமார் 2 மணிநேர  போராட்டத்திற்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த விபத்தில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்ட போதும், 30க்கும் மேற்பட்ட கடைகள் சேதமடைந்தன. தீயின் வெப்பம் காரணமாக, ஆயிரம் கால் மண்டபத்தின் மேற்கூரைகளில் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விபத்து நிகழ்ந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

தீ விபத்தால் அந்த பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி பக்தர்களும் பெரும் அதர்ச்சிக்குள்ளாயினர்.