ஸ்ரீமுஷ்ணம்,

தீ வைத்து எரிக்கப்பட்டதாக கூறிய ஆனந்த், பின்னர், போலீசாரின் எப்ஐஆரில் தன்னைத்தானே மண்எண்ணை ஊற்றி எரித்துக்கொண்டதாக கூறியிருப்பதாக பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று விவாதிக்கப் பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

டலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே சாத்தாவட்டம் கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்பவர் மீது மர்ம நபர்கள் தீ வைத்ததாக கூறப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆனந்தை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர், சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

ஆனந்த் தாக்கப்பட்டு உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்ட தகவல் காரணமாக அவரது உறவினர்க ளும், அந்த ஊர் மக்களும், ஆனந்தை தீவைத்து எரித்தவர்களை கைது செய்ய கோரி போராட்டம் நடத்தினர்.

படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஆனந்த் கொடுத்ததாக கூறப்பட்ட வாக்கு மூலத்தின்படி,  சாத்தாவட்டம் காலனியை சேர்ந்த செல்வராசு மகன் சிலம்பரசன், பாலமுருகன் மகன் பாரதி, தங்கமணி மகன் தமிழ்மணி, மணி மகன் மணிமாறன், எலிகுஞ்சு மகன் சிற்றரசன், பூவரசன் மகன் புதுராசா, சாமிக்கண்ணு மகன் சுப்புனு என்கிற சுப்பிரமணியன் ஆகியோர் மீது ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுராசா(21), சுப்புனு(52) ஆகியோரை கைது செய்தனர்.  மற்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதன் காரணமாக  அவரது சொந்த ஊரான சாத்தாவட்டம் கிராமத்தில் இருபிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி, பதற்றம் நிலவி வருகிறது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜரத்தினம், துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், வெங்கடேசன், பாண்டியன் ஆகியோர் மேற்பார்வையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் சாத்தாவட்டம் கிராமத்தில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், போலீசார் ஆனந்திடம் பெற்ற வாக்குமூலத்தை தொடர்ந்து போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், ஆனந்த், தன்னைத்தானே கெரோசின் ஊற்றி தீவைத்துக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

ஆனந்த் மருத்துவமனையில் சேரும்போது, தன்னை தீ வைத்ததாக சிலரின் பெயரை சொன்னவர் பின்னர் போலீசாரிடம் தன்னைத்தானே தீ வைத்துக்கொண்டதாக கூறியது ஏன் என்றும், அதை மாற்றி சொல்ல காரணமா என்ன? இதற்கு ஏதும் பின்னணி உள்ளதா? என பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.