நிலக்கரி கிடங்கில் தீ! 2வது நாளாக தீயை அணைக்க முடியாமல் என்எல்சி திணறல்!

நெய்வேலி,

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இன்று இரண்டாவது நாளாக தீ எரிந்து வருகிறது. இதன் காரண மாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி எரிந்து சாம்பலாகி வருகிறது.

எரிந்து வரும் தீயை அணைக்க முடியாமல் என்எல்சி நிர்வாகம் திணறி வருவதாக கூறப்படுகிறது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது.  என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்க்கு சொந்தமான இந்த சுரங்கத்தில்,  முதலாவது சுரங்க விரிவாக்கத்தின்போது, தேவைக்கு அதிகமான  நிலக்கரி வெட்டியெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலக்கரி  பங்கர் எனப்படும் சேமிப்பு கிடங்கில் கொட்டப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிலக்கரி கிடங்கில்,  அதிக வெப்பத்தின் காரணமாக தீ பிடித்ததாக கூறப்படுகிறது. நேற்று திடீரென இந்த பங்கர்  நிலக்கரி சேமிப்புப் பகுதியில்  தீவிபத்து ஏற்பட்டது.

காற்றின் வேகம் அதிகம்  காரணமாக தீ மளமள வென பிடித்து எரியத் தொடங்கியது.

இன்று  இரண்டாவது நாளாக தீ எரிந்து வரும் நிலையில்,  தீயை அணைக்கும் முயற்சியில் என்எல்சியை தீயணைப்புத்துறையினர் மற்றும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதன்காரணமாக பலகோடி ரூபாய் மதிப்புள்ள டன் கணக்கிலான நிலக்கரி எரிந்து நாசமாகி வருகிறது.