ஏழுமலையான் கோயில் எதிரே ஆஸ்தான மண்டப கடைகளில் தீ; ஒருவர் உயிரிழப்பு

திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோயில் எதிரே ஆஸ்தான மண்டபத்தில் உள்ள கடைகளில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த தீ விபத்தில் அங்கிருந்த கடைகளில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. திருப்பதி ஏழுமலையான் கோயில் எதிரே உள்ள ஆஸ்தான மண்டபத்தில் ஏராளமான கடைகள் தேவஸ்தானம் சார்பில் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த கடைகளில் சுவாமி படங்கள், வளையல்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவி வருவதால், தேவஸ்தானம் சார்பில் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. 6 ஆயிரம் முதல் 9 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு வருகின்றனர். அவ்வாறு வரக்கூடிய பக்தர்களும் நேரடியாக சுவாமி தரிசனம் செய்த பின்னர் அவரவர் ஊர்களுக்கு சென்று விடுகின்றனர். இதனால் திருமலையில் உள்ள கடைகளில் வியாபாரம் மிகவும் குறைவாக காணப்படுகிறது. இதனால் பல்வேறு கடைகள் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஆஸ்தான மண்டபத்தில் கீழ் தளத்தில் மூடப்பட்டிருந்த ஒரு கடை இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியது.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள், தேவஸ்தான அதிகாரிகளுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சில மணி நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர். இதில் 3கடைகளில் உள்ள பொருட்கள் நாசமானது. உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் ெபரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூடப்பட்டிருந்த கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தால் திருமலையில் பரபரப்பு ஏற்பட்டது.