பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கக்கூடாது: உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு மனு

டில்லி:

நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க கோரி உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாக கூறி, பட்டாசுக்கு தடை விதிக்க கோரி பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றம் மாநிலதலைநகர் உள்பட குறிப்பிட்ட இடங்களில் பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதித்தனர்.

அதைத்தொடர்ந்த மாசு குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு, அதன் ஆய்வு முடிவை தொடர்ந்து, சில கட்டுப்பாடுகளுடன்  பட்டாசு விற்பனைக்கான உரிமம் வழங்க மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நாடு முழுவதும்  பட்டாசு விற்பனைக்கு மீண்டும் தடை விதிக்க வேண்டும் என்று, கடந்த ஆண்டு அக்டோபர் 5ந்தேதி  மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், பட்டாசு தொழிலை காப்பாற்ற கோரி சிவகாசி பகுதியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில், பட்டாசுக்கு தடை கோரி உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மன தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில்  லட்சக்கணக்கானோர் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசுக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்தால்  பட்டாசு தொழிலில் ஈடுபடடு உள்ள   8 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்கக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை   3 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம்  ஒத்திவைத்துள்ளது.