நம் ஊரில் பெண் குழந்தையை பெற்றெடுக்கும் தாயார்களை, ஜென்ம விரோதிகள் போல் சொந்த உறவினர்களே பார்க்கிறார்கள். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டு 14 ஆண் குழந்தைகளுக்கு தந்தையான நிகழ்வும், அவரது பெண் குழந்தை கனவு இப்போது நிறைவேறி இருப்பதும் “டாக் ஆஃப் தி டவுன்” ஆகும்.

அங்குள்ள மிச்சிகனை சேர்ந்த ஷாவந்தும், கேகரினும் பள்ளியில் படிக்கும் போதே காதலித்தனர். படிக்கும் போதே திருமணமும் செய்து கொண்டனர், ஆண்டு 1993.

பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் படித்து பட்டம் வாங்கியபோது, அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்திருந்தன. ஷாவந்துக்கு பெண் குழந்தை மீது தான் கொள்ளை ஆசை.

கணவனின் ஆசையை நிறைவேற்ற அவரது மனைவி கேதரினுக்கு 30 ஆண்டுகள் தேவைப்பட்டது.

ஆம். 30 ஆண்டுகளுக்கு பிறகு கேதரினுக்கு மூன்று தினங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.

பிரச்சனை என்ன வென்றால், பெண் குழந்தை மீதான மோகத்தில் கேதரின் ஏற்கனவே 14 ஆண் குழந்தைகளை பெற்றிருப்பது தான். ஷாவந்த் – கேதரின் தம்பதியரின் மூத்த ஆண் பிள்ளை திருமண வயதை எட்டியுள்ள நிலையில், அவர்கள் மீண்டும் பெற்றோர் ஆகியுள்ளனர்.

அமெரிக்காவில் இதெல்லாம் சகஜம் தானே?

– பா. பாரதி