சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு முதன்முதலாக பலியான மருத்துவர் உடலை பொதுசுடுகாட்டில் இருந்து தோண்டி எடுத்து,  கிறிஸ்தவர்களுக்கான  கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யலாம் என  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாக்டர் சைமன்  – உடன் குடும்பத்தினர்

சென்னை, அமைந்தகரையைச் சேர்ந்த பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்.  டாக்டர் சைமன் ஹெர்குலஸ். இவர் கொரோனா நோயால் கடந்த வருடம் (2020) ஏப்ரல் 19ம் தேதி காலமானார்.  அவரது உடலை அடக்கம் செய்ய, சக டாக்டர்கள் மற்றும் உறவினர்கள், டி.பி.சத்திரம் பகுதியில் உள்ள, கல்லறை தோட்டத்திற்கு எடுத்து சென்றனர். அருகில் வசிக்கும் மக்கள், கொரோனாவால் இறந்தவர் உடலை, இங்கு அடக்கம் செய்தால், எங்களுக்கும் நோய் பாதிக்கும் எனக்கூறி, எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தினர். டாக்டர் உடலை, ஆம்புலன்சில் ஏற்றி, நியூ ஆவடி சாலையில் உள்ள, வேலங்காடு மயான பூமிக்கு எடுத்துச் சென்று, கொரோனா நெறிமுறைகளின்படி  அடக்கம் செய்யப்பட்டது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இதைத்தொடர்ந்து, மருத்துவர் சைமன் கிறிஸ்தவர் என்பதால், அவரது உடலை தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.  ஆனால், கொரோனா தொற்றால் அவர் மரணம் அடைந்ததால், அவரது உடலை தோண்டி எடுக்க அரசு மறுப்பு தெரிவித்து விட்டது. இது தொடர்பாக சைமனின் மனைவி, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. மறைந்த மருத்துவசர் மனைவியின் கோரிக்கையை ஏற்று சைமன் உடலை ஆவடி வேலங்காடு இடுகாட்டிலிருந்து பாதுகாப்புடன் சைமன் உடலை தோண்டி எடுத்து, கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய ஆணையிட்டுள்ளது.