ஷில்லாங்:

ந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தொற்று வைரஸ் பரவிய நிலையில், மேகாலயா மாநிலத்தில்  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இந்த நிலையில், அந்த நபர்  உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்தான் அந்த மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட முதல் நபரும், பலியான முதல்நபரும் ஆவார்.

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்,  இந்தியாவிலும் அதன் தாக்கத்தை தீவிரப்படுத்தி வருகிறது. இருந்தாலும் ஒருசில வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பரவல் இல்லாத நிலை நீடித்து வந்தது.

அதுபோல, அந்தமான் நிக்கோபார் தீவுகள், அருணாச்சலப் பிரதேசம், சட்டீஸ்கர், மணிப்பூர், மிசோரம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் இதுவரை உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

இந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகலாயாவில், கடந்த 12ந்தேதி தான் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது 69 வயதான மருத்துவர் ஒருவர் வைரஸ் தொற்று அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், அவர் உயரிழந்துவிட்டதாக மாநில முதல்வர் கான்ராட் சங்மா  உறுதிப்படுத்தி உள்ளார்.  இதுவரை உயிரிழப்பு ஏற்படாத மாநிலமாக இருந்து வந்த மேகாலயாவில்  முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த மருத்துவர் பெயர் டாக்டர் ஜான் எல் சைலோ ரைன்டாதியாங் (வயது 69) அவர், அங்குள்ள பெத்தானி எனப்படும் தனியார் மருத்துவமனையின் நிறுவனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இன்று  அதிகாலை 2.45 மணிக்கு காலமானார் என்று குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

மேகாலயா மாநிலத்தில் கொரோனாவால் முதல் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது