டெல்லி: இந்தியாவில், பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், வரும் 13ந்தேதி (ஜனவரி, 2021) முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் பல நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.  இந்த நிலையில்,  இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு  தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, தடுப்பூசிகளை விநியோகம் செய்ய தயாராக இருப்பதாக அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில்,   அடுத்த 10 நாட்களில் முதல்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகம் செய்ய தயாராக  இருப்பதாக  மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி வரும் 13ந்தேதி முதல்கட்டமாக கொரோனாதடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூஷன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சென்னை, மும்பை, கொல்கத்தா, கர்னல் ஆகிய 4  இடங்களில் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு மையங்கள் நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் DCGIபடி, கோவிஷீல்ட் (Covishield) மற்றும் கோவாக்சின் (Covaxin) இரண்டையும் இரண்டு அளவுகளில் நிர்வகிக்க வேண்டும், மேலும் இந்த தடுப்பூசிகளை 2-8 டிகிரி செல்சியஸில் சேமிக்க முடியும்.
அதிக ஆபத்துள்ள குழுக்கள் ஏற்கனவே மத்திய அரசால் அடையாளம் காணப்பட்டுள்ளன என்பதையும், இந்த குழுக்களின் மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.