தண்ணீரை முதன்முதலாக மனிதனின் அடிப்படை உரிமையாக்கிய ஐரோப்பிய நாடு

ல்ஜூபிஜானா:

மத்திய ஐரோப்பாவில் உள்ள ஸ்லோவேனியா நாட்டில் குடிநீர் மனிதனின் உரிமை என முதன்முதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பு மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டின் நீராதாரம் வணிக மயமாக்குவது தடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அந்நாட்டு பிரதமர் மிரோ சிரார் பேசுகையில்,‘‘ 21ம் நூற்றாண்டில் தண்ணீர் தான் தங்க திரவமாகும். நம் நாட்டின் நிலத்தடி நீர் மிகவும் அதிக தரத்துடன் உள்ளது. அதனால் காலபோக்கில் இது மதிப்புமிக்க பொருளாக வாய்ப்பு அதிகளவில் உள்ளது.

இதனால் வெளிநாட்டு கார்பரேட் நிறுவனங்கள் இதற்காக அழுத்தம் கொடுக்க நேரிடும். அதற்கு நாம் இடம் அளிக்ககூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.

ஸ்லோவேனியாவின் அரசியலமைப்பில் ‘‘அனைவருக்கும் குடிநீர் பெறுவது அடிப்படை உரிமையாகும். குடிநீர் ஆதாரங்கள் பொது சொத்தாக கருதப்படும் அரசு சார்பில் நிர்வாகம் செய்யப்படும். அனைத்து வீ டுகளுக்கும், குடிமகன்களுக்கும் முதன்மை மற்றும் தொடர்ச்சியாக நீடித்து குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் என்பது விற்பனைக்குறிய பொருள் அல்ல’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் தற்போது 2 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். ஐரோப்பிய யூனியனில் தண்ணீரை மனிதனின் அடிப்படை உரிமையாக முதன் முதலாக ஸ்லோவேனியா தான் அறிவித்துள்ளது. ‘‘அரசியலமைப்பில் தண்ணீரை அடிப்படை உரிமையாக்கியது முக்கியமான சட்டப்பூர்வ நடவடிக்கையாகும்’’ என்று ஐரோப்பா துணை இயக்குனர் போடிஸ் பில்லிபோபு தெரிவித்துள்ளார்.