மும்பை: உலகக்கோப்பையில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்தியரான சேட்டன் ஷர்மாவின் கதை சற்று சோகமானது. கடந்த 1987ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில், இவர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தாலும், இவருக்கு நினைத்த புகழ் கிடைத்துவிடவில்லை.

மாறாக, அதற்கு முந்தைய 1986ம் ஆண்டில் ஷார்ஜாவில் நடந்த இந்திய -பாகிஸ்தான் போட்டியில், இவர் வீசிய கடைசி ஓவரின் கடைசிப் பந்தில், பாகிஸ்தான் அணியின் ஜாவித் மியான்டட் சிக்ஸர் அடித்து இந்தியாவை தோல்வியடையச் செய்த நிகழ்வுதான் ரசிகர்களின் கண்முன்னால் அப்போதும் பெரிதாக நின்றது.

அதன்பிறகு, இங்கிலாந்து தொடரில் இவர் சிறப்பாக செயல்பட்டாலும் இவரை யாரும் பாராட்ட தயாராக இல்லை. அதற்கடுத்த ஆண்டுதான் உலகக்கோப்பை போட்டி வந்தது.
நாக்பூரில் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் இவர் ஹாட்ரிக் எடுத்தார்.

இதுகுறித்து கூறிய அவர், “முதல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது எனக்கு பெரும் நிம்மதியை அளித்தது. ஏனெனில், அப்போது நியூசிலாந்து பெரியளவில் அடித்து ஆடிக்கொண்டிருந்தது. ஹாட்ரிக் குறித்து நான் யோசிக்கவே இல்லை. ஆனால், கபில்தேவ்தான் ஹாட்ரிக் குறித்து நம்பிக்கையூட்டினார். பின்னர்தான் அதுவும் நடந்தது. அந்த விஷயம், என்னை ஜாவித் மியான்டட் துயரத்தை மறக்க உதவியது” என்றார்.

ஆனால் பாவம்! ஹாட்ரிக் சாதனை புரிந்த முதல் இந்தியராக இருந்தாலும், இவர் ஜாவித் மியான்டட்டை கடைசிப் பந்தில் சிக்ஸர் அடிக்க அனுமதித்த சம்பவத்தை ரசிகர்கள் மறக்கத் தயாராக இல்லை. இவர் நிகழ்த்திய ஹாட்ரிக் சாதனையைவிட, இவர் செய்த தவறுதான் ரசிகர்களுக்குப் பெரிதாக தெரிந்தது.
உண்மையில், இவர் ஒரு பாவப்பட்ட கிரிக்கெட் வீரர்தான்..!