தோஹா: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில், ஈட்டி எறிதல் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் அன்னு ராணி என்ற வீராங்கணை.

கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்துவரும் 17வது உலக சாம்பியன் தடகளத் தொடரில், ஈட்டி எறிதல் தகுதி சுற்றில் இந்தியாவின் அன்னு ராணி பங்க‍ேற்றார்.

இதில் 31 பேர் இரண்டு பிரிவுகளாக விளையாடினர். ஒவ்வொரு வீராங்கணைக்கும் 3 வாய்ப்புகள் வழங்கப்படும். இதில் அன்னு ராணி ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றிருந்தார்.

தனது முதல் வாய்ப்பில் அவர் 57.05 மீட்டர் தூரமும், இரண்டாவது வாய்ப்பில் 62.43 மீட்டர் தூரமும், மூன்றாவது வாய்ப்பில் 60.50 மீட்டர் தூரமும் எறிந்தார். இவர் தேசிய சாதனையும் படைத்தார்.

‘ஏ’ பிரிவில் மூன்றாமிடம் பிடித்த அன்னுராணி, ஒட்டுமொத்தமாக 5வது இடம் பிடித்ததன் மூலமாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார். இதன்மூலமாக உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியர் என்ற சாதனையை தனதாக்கிக் கொண்டார்.