செஞ்சுரியன்: தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியை, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி.

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்கள் சேர்த்தது.

பின்னர் சற்று எளிய இலக்க‍ை விரட்டிய பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் இமாம்-உல்-ஹக், 70 ரன்களை சேர்த்தார். அதேசமயம், கேப்டன் பாபர் ஆஸம் 104 பந்துகளில் 103 ரன்களை அடித்து அணியின் வெற்றிக்கு தூணாய் விளங்கினார்.

முகமது ரிஸ்வான் 40 ரன்களை அடிக்க, ஷதாப் கான் 33 ரன்களை சேர்த்தார். ஆனாலும், பாகிஸ்தான் அணியால் எளிதாக வெற்றியை நெருங்க முடியவில்லை. ஆட்டம் கடைசிப் பந்துவரை நீண்டது. ஒருவழியாக கடைசிப் பந்தில் வெற்றியை எட்ட உதவினார் பஹீம் அஷ்ரப்.

தென்னாப்பிரிக்காவின் நார்ட்ஜேவுக்கு 4 விக்கெட்டுகள் கிடைத்தன. இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது பாகிஸ்தான்.