சிற்பக்கலை பட்டம் பெற்றவர்களுக்கே ஸ்தபதி பணியில் முன்னுரிமை: உயர்நீதிமன்றம்

சென்னை: இந்து அறநிலையத் துறையில் ஸ்தபதிகள் மற்றும் பொறியாளர் பணிகளுக்கு, சிற்பக்கலை படிப்பில் பட்டம் பெற்றவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை அருகே மாமல்லபுரத்தில் அமைக்கப்பட்ட அரசு சிற்பக்கலை கல்லூரியில் படித்த முருகன் என்பவர் தொடுத்த வழக்கில் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது உயர்நீதிமன்றம்.

இக்கல்லூரியில் இதுவரை 1100 பேர் வரை படித்து பட்டம்பெற்று வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கல்லூரியில் கட்டடக் கலை, ஆகம சாஸ்திரம் மற்றும் சிற்பக் கலை உள்ளிட்டப் பிரிவுகளில் பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், “கோவில் புனரமைப்புப் பணிக்கு சிவில் இன்ஜினியரிங் படிப்பு என்பது மட்டுமே தகுதியாகாது. அதேத்துறை சார்ந்த கல்லூரிகளில் சிற்பக்கலை தொடர்பான பட்டப்படிப்பு முடித்தவர்கள்தான் முழு தகுதியுடையவர்கள்.

அவர்கள்தான், ஸ்தபதி மற்றும் பொறியாளர் என்ற இருவகைப் பணிகளையும் திறம்பட மேற்கொள்ள முடியும். ஒரு குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தை துவக்கும்போது அதுசார்ந்த வ‍ேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் அரசின் கடமை.

எனவே, பொறியியல் மற்றும் சார்பு பணிகள் சார்ந்த விதிகளை அறநிலையத்துறை மூன்று மாதங்களில் இறுதிசெய்ய வேண்டும். கோவில்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஸ்தபதிகள் நியமனம் செய்யப்பட வேண்டும். மாமல்லபுரம் சிற்பக்கலை கல்லூரிக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளையும் அறநிலையத்துறை வழங்க வ‍ேண்டும்” என்று தீர்ப்பில் கூறினார்.