கொல்கத்தா: மேற்குவங்க தலைநகரின் மெட்ரோ ரயில் சேவைகளுக்கான முதல் வெளிநாட்டு ரயில் பெட்டித் தொடர், சீனாவிலிருந்து வந்து இறங்கியுள்ளது. இந்தப் பெட்டித் தொடர், கொல்கத்தா துறைமுகத்தில் இறக்கப்பட்டது.

இவை, துறைமுகத்திலுள்ள ரயில்வே யார்டில் பொருத்தப்பட்டு, நோவாபரா பராமரிப்பு மையத்திற்கு, ஒரு டீசல் இன்ஜின் மூலமாக இழுத்துச் செல்லப்படும்.

சீனாவிலுள்ள டாலியன் லோகோமோடிவ் & ரோலிங் ஸ்டாக் கம்பெனியிடம்தான் இந்த ரயில்வே ரேக்குகள் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஒப்பந்தம் செய்யப்பட்ட மொத்த 14 ரேக்குகளில், தற்போது முதல் ரேக் வந்துவிட்டது. இது, பலகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, அதன்பிறகே வணிகரீதியிலான இயக்கத்திற்கு அனுமதிக்கப்படும்.

அந்த சோதனைகளின் மூலமாக, இந்த ரேக் குறித்த சரியான மதிப்பீடு கிடைத்தப் பிறகே, மற்ற ரேக்குகள் வந்துசேரும். லக்னோவிலுள்ள ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தர மதிப்பீட்டு அமைப்பின் அங்கீகாரத்தைப் பெறுவது கட்டாயம்.

மேலும், அந்த ரேக்குகள் வணிகரீதியான ஓட்டத்தை தொடரும் முன்னதாக, ரயில்வே பாதுகாப்பு கமிஷனரிடமிருந்து தரச் சான்றிதழ் பெறுவதோடு, ரயில்வே வாரியத்திடமிருந்தும் அனுமதி பெற வேண்டும்.

– மதுரை மாயாண்டி