டில்லி,

பிரதமர் மோடி  முதலில் காஷ்மீர் பிரச்சனை சரி செய்யுங்கள். அப்புறம் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளலாம் என்று விசுவ இந்து பரிசுத் தலைவர் பிரவீன் தொகாடியா பகிரங்கமாக  கூறி உள்ளார்.

விசுவ இந்து பரிஷத் தலைவரின் நேரடி குற்றச்சாட்டு, பாரதியஜனதா கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பதான்கு என்ற இடத்தில் அமர்நாத் சென்று பனி லிங்கத்தை தரிசித்து விட்டு பஸ்சில் திரும்பிக்கொண்டு இருந்த பக்தர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர்.  19 பேர் காயம் அடைந்தனர்.

இச்சம்பவம் காஷ்மீர் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீரில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் மோடி அரசு தோல்வியடைந்ததன் விளைவாகவே,  அமர்நாத் யாத்ரிகள் மீது காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக விசுவ இந்து பரிஷத் தலைவர் தொகாடியா  பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

மோடி அரசு பதவியேற்ற 3 ஆண்டுகளிலும் காஷ்மீர் தீவிரவாதிகள் துப்பாக்கி பயிற்சி பெற்று மேலும் வலுவடைந்து உள்ளதாகவும், காஷ்மீர் மாநிலத்தை ஆண்டு வரும் மெகபூபா முஃப்தி தலைமையிலான ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு பயங்கரவாதிகளுக்கு எதிராக எந்தவித நட வடிக்கையும் எடுக்காமல், அவர்களுக்கு உதவி வருவதாகவும் குற்றம்சாட்டி உள்ள தொகாடியா, காஷ்மீர் அரசை கலைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மெகபூபா தலைமையிலான அரசு, காஷ்மீரில், ராணுவத்தினருக்கு எதிராக கற்களை வீசிய வர்கள்மீது எந்தவித நடவடிக்கை எடுக்காததால்தான், தற்போது அமர்நாத் யாத்ரீகர்கள்மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது என்றும்,

இதுபோன்ற அரசு தேவையில்லை என்றும், காஷ்மீரில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர மெகபூபா தலைமையிலான  விரும்பவில்லை என்றால்,   மத்திய அரசு காஷ்மீர் அரசை கலைத்துவிட்டு,   காஷ்மீர் முழுவதும் ராணுவம் மற்றும் ஆயுதப்படை காவலர்களின் கண்காணிப்பில் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளார்.

மேலும், பிரதமர் மோடி வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்ளும் போது எல்லாம் பயங்கர வாதத்திற்கு எதிராக பேசிவருகிறார். உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்து வருகிறார்.

ஆனால் காஷ்மீரில் தொடர்ந்து வரும் பயங்கரவாதம் ஒழிப்பது குறித்து  நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள தொகாடியா,

வெளிநாடுகளில் பெரியதாக பேசியது எல்லாம் போதும்,  முதலாவதாக காஷ்மீர் பிரச்சினையை தீருங்கள், பின்னர் உங்கள் வெளிநாட்டு பயணங்களை வைத்துக் கொள்ளுங்கள் என்றும் பிரதமர் மோடிக்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

தொகாடியாவின் பேச்சு பாரதியஜனதா தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பிரதமர் மோடி, நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடாமல் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதிலேயே குறியாக இருக்கிறார் என்று குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்துள்ள நிலையில்,

தற்போது பாரதியஜனதாவின் சகோதர கட்சியான விசுவ இந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகாடிய அதிரடியாக பேசி  இருப்பது டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.