திருச்சி: ‘முதலில் உன் கட்சியைக் காப்பாற்றிக் கொள்’, ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை உடைக்க முடியாது என அதிமுக துணைஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்தார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. திமுக,அதிமுக உள்பட பல அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.

திமுக சார்பில், தமிழகம் மீட்போம், அதிமுகவை நிராகரிக்கிறோம், விடியலை நோக்கி என்ற பல்வேறு பெயர்களில் தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. அதிமுக சார்பில்,  #வெற்றிநடை_போடும்_தமிழகம் என்ற பெயரில் அதிமுக தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி இன்றும், நாளையும் திருச்சி மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று திருச்சி அருகேஉள்ள தொட்டியம் வான பட்டறை மைதானத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது, திமுகவை கடுமையாக சாடினார்.

அவர் பேசியதாவது,   “எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் புதிதாக கட்சித் தொடங்குபவராக இருந்தாலும் எம்.ஜி.ஆர் பெயரை உச்சரிக்காமல் இருப்பதில்லை. அந்தளவிற்கு உத்தம தலைவர்.எம்.ஜி.ஆர், எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இருபெரும் தலைவர்களும் தெய்வம் போல் மக்களுக்கு நல்லது செய்துள்ளனர். எனவே அவர்களின் இந்த ஆட்சி தொடர வேண்டும்.

தமிழகத்தில்,  கல்விப் புரட்சி ஏற்பட்டுள்ளது. உயர்கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பல துறைகள் இருந்தாலும் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று மக்கள் நலத்திட்டங்களை விவரித்தவர், நமது மக்களின் அரசின் பல நல்ல திட்டங்களை அனுபவித்து வருகின்றனர்.  ஆனால், எதிர்க்கட்சித் தலைவர், மு.க.ஸ்டாலின்  அதிமுக அரசு மீது  பொய் குற்றம் சாட்டுகிறார். அதிமுக உடையும் என்று பேசியுள்ளார்.

இருபெரும் தலைவர்களும் உயிரைத்தியாகம் செய்து வளர்த்த அதிமுகவை உடைக்க மு.க.ஸ்டாலின் சதித்திட்டம் செய்கிறார் என்று ஆவேசமாக கூறிய எடப்பாடி,  கட்சியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். யாராலும் அதிமுக வை உடைக்க முடியாது. ஒரு அதிமுக தொண்டனைக் கூட தொட்டுப்பார்க்க முடியாது. கட்சியை உடைக்கவும் ஆட்சியைக் கவிழ்க்கவும் எவ்வளவோ முயற்சி. ஆனால், மக்களின் ஒத்துழைப்பால் வலுவான இயக்கமாக அதிமுக உள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசியவர்,  கட்சியில், குழப்பம் ஏற்படுத்தி கட்சியை உடைக்க சதி செய்யலாம். ஆட்சியைப் பிடிக்கலாம் என்கிற ஸ்டாலினின்  கனவு நிறைவேறாது என்று கடுமையாக விமர்சித்தவர், முதலில் உன் கட்சியை காப்பாற்றிக் கொள். அதிமுக தெய்வசக்தி  உள்ள உயிரோட்டமுள்ள இயக்கம். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் உடைக்க முடியாது. எனவே, நல்ல எண்ணத்தை ஸ்டாலின் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால்,  திமுகவினருக்கு நல்ல எண்ணம் வராது என்றும்” குற்றம்சாட்டி பேசினார்.

மாநிலத்தில்  “எதிர்க்கட்சித் தலைவருக்கு பொய்ய கூட ஒழுங்கா சொல்லத் தெரியல. பொய்ய சொன்னாலும் பொருத்தமா சொல்லனும் போக்கத்தவங்களா? என்பது அவருக்குத்தான் பொருந்தும். என்மீதும், அமைச்சர்கள் மீதும் ஊழல் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்துள்ளார். டெண்டர் நடக்காத, ஒன்றரை ஆண்டுக்கு முன்பு டெண்டர் ரத்தானது கூட தெரியாமல் ஊழல் பட்டியல் கொடுக்கிறார் ஸ்டாலின். நாட்டில் என்ன நடக்குதுன்னே தெரியாத எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்” என்று குற்றம்ச்சாட்டினார்.

தொடர்ந்து, அந்த பகுதியைச் சேர்ந்த , வாழை, வெற்றிலை, கரும்பு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். முன்னதாக தொட்டியம், வெற்றிலை பால விநாயாகர் கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதையும், பெண்கள் மஞ்சள்  கொத்து அளித்து ஆரத்தி எடுத்து முதல்வருக்கு வரவேற்பளித்தனர். தொடர்ந்து முசிறி, கண்ணனூர் , துறையூர் மண்ணச்சநல்லூர் சமயபுரம் டோல்கேட் ஆகிய இடங்களில் பேசுகிறார்.