பாகிஸ்தானில் செய்தி சேனலில்  முதல் சீக்கிய செய்தி தொகுப்பாளர்

பாகிஸ்தானில் சீக்கியர் ஒருவர் முதன்முறையாக செய்தி சேனல் ஒன்றில் செய்தி தொகுப்பாளர் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் சாகேசர் நகரில் வசித்து வருபவர் ஹர்மீத் சிங். சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர். இவர் கராச்சி நகரில் உள்ள மத்திய உருது பல்கலை கழகத்தில் இதழியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பு படித்துள்ளார்.

ஊடகத்தில் ஒரு செய்தியாளராக பணியை தொடங்கிய சிங், பப்ளிக் நியூஸ் சேனலில் செய்தி தொகுப்பாளர் பணிக்கு அமர்த்தப்பட்டு இருக்கிறார்.

பாகிஸ்தானில் செய்தி சேனல் ஒன்றில் செய்தி தொகுப்பாளர் பணியில் சேரும் முதல் சீக்கியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

இதுபற்றி சிங் கூறும்பொழுது, “பாகிஸ்தானில் ஊடகத்துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. இத்துறையில் பணியாற்றுவதற்கு நான்  ஆர்வத்துடன் இருந்தேன்.  இதற்காக நான் கடுமையாக உழைத்துள்ளேன்.  அதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

அண்மையில், மன்மீத் கவுர் என்பவர் பாகிஸ்தானில் முதல் பெண் சீக்கிய செய்தியாளர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.