தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவையும் வென்று, 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், செப்டம்பர் 25 பிற்பகல் ஒரு மணியளவில் காலமானார்.
இந்நிலையில், சென்னையில் SPB நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
காணொளி மூலம் பேசிய சிவக்குமார், SPB என்னை விட ஐந்து வருடம் சிறியவர். அவர் முதல் முதலில் எனக்கு பால் குடம் படத்துக்காக மல்லிகைப் பூ வாங்கி வந்தேன் பாடல் பாடினார். இதற்கு முன்பே சாந்தி நிலையம் படத்துக்காக இயற்கை என்னும் இளைய கன்னி பாடலை ஒலிப்பதிவு செய்துவிட்டார்கள். எம்ஜிஆருக்காக ஆயிரம் நிலவே வா பாடலையும் ஒலிப்பதிவு செய்துவிட்டார்கள்.
ஆனால் பால்குடம் படம் தான் முதலில் வெளியானது. 1969 பொங்கலுக்கு இந்தப் படம் வெளியானது. அந்தக் கணக்குப்படிப் பார்த்தால் எஸ்.பி.பி. தமிழில் எனக்குத்தான் முதலில் பாடியிருக்கிறார் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.