மழையால் ரத்தான முதல் டி-20 போட்டி – ரசிகர்கள் அதிருப்தி

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் நடைபெறவிருந்த இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

மழை வரும் என்று தெரிந்தும் அங்கே போட்டியை கிரிக்கெட் வாரியம் எதற்காக ஏற்பாடு செய்ய வேண்டுமென ரசிகர்கள் தங்களின் கோப விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

போட்டியைக் காண்பதற்காக அருகிலுள்ள மாவட்டங்கள், ஹரியானா மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களிலிருந்தும் ரசிகர்கள் திரளாக வந்திருந்தனர். ஆனால், ஆங்காங்கு குட்டைபோல் தண்ணீர் தேங்கியிருந்த காரணத்தால், போட்டி முற்றிலும் கைவிடுவதாக அறிவிக்கப்பட்டது.

குறைந்தபட்சம் தலா 5 ஓவர்களாவது பந்து வீசப்பட்டு போட்டி நடைபெறும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால், கடைசியில் அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஒரு பந்துகூட வீசப்படவில்லை.

அதேசமயம், பிசிசிஐ ஆதரவில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளும் காப்பீட்டின் கீழ் வருவதால், போட்டி ரத்தானதை அடுத்து, ரசிகர்கள் அனைவருக்கும் அவர்களின் டிக்கெட் பணம் திரும்ப கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது டி-20 போட்டி மொஹாலியிலும், மூன்றாவது போட்டி பெங்களூருவிலும் நடைபெறவுள்ளது.

You may have missed