கராச்சி: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி எழுச்சி கண்டுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் 168 ரன்களுக்கு 1 விக்கெட் மட்டுமே இழந்துள்ளது தென்னாப்பிரிக்கா.

நீண்ட ஆண்டுகள் கழித்து, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் துவங்கியது.

இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, முதலில் களமிறங்க முடிவு செய்தது. ஆனால், அந்த இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி எதிர்பார்த்த வகையில் ஆடவில்லை. துவக்க வீர் டீன் எல்கர் மட்டும் அதிகபட்சமாக 58 ரன்களை அடித்தார். இறுதியில், 69.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 220 ரன்களை மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்க அணியில் 2 பேர் ரன்அவுட் ஆனார்கள்.

பின்னர், தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய பாகிஸ்தான் அணியில், பவாத் ஆலம் 109 ரன்களை அடித்து சதம் பதிவுசெய்தார். பஹீம் அஷ்ரப் 64 ரன்களை அடிக்க, அஸார் அலி 51 ரன்களை சேர்த்தார். இறுதியில், 119.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 378 ரன்கள் அடித்து 158 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

பின்னர், தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய தென்னாப்பிரிக்கா, 1 விக்கெட் மட்டுமே இழந்து 167 ரன்களை அடித்துள்ளது. இதன்மூலம் தற்போதைய நிலையில் 9 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. தற்போது 3ம் நாள் ஆட்டம் நடந்துவருகிறது.

தென்னாப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் 69 ரன்களையும், ரஸி வான் டெர் உசேன் 62 ரன்களையும் அடித்து களத்தில் உள்ளனர்.