பெல்ஜியம் நாட்டில் முதல் முதலாக பெண் பிரதமர் நியமனம்

புருசெல்ஸ்

பெல்ஜியம் நாட்டின் முதல் தற்காலிகப் பெண் பிரதமராக சோபி வில்லியம்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

பெல்ஜியம் நாட்டில் அரசியல் நிலைமை மோசமாக உள்ளது.    ஏற்கனவே கடந்த 2010-11 ஆம் வருடங்களில் இந்த நாடு அரசு அமையாமல் 541 நாட்கள் இருந்து வந்தது.   அதன் பிறகு அமைக்கப்பட்ட  அரசும் பல முறை  பல சோதனைகளைச் சந்தித்து வந்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஏற்பட்ட கூட்டணிப் பிளவால் இந்நாட்டுக் கூட்டணி அரசு கவிழ்ந்தது.  அதன் பிறகு சார்லஸ் மிச்செல் தற்காலிகமாக பிரதமர் பதவியை நிர்வகித்து வருகிறார்.   தற்போது நாட்டின் அதிபராக உள்ள சார்லஸ் மிச்செல் வரும் டிசம்பர் 1 முதல் ஐரோப்பிய நாடுகளின் தலைவராகப் பதவி ஏற்க உள்ளார்.

எனவே இவர் வரும் நவம்பர் 1 முதல் பெல்ஜியம் அதிபர் பதவியில் இருந்து விலக உள்ளார்.   கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததாலும் கூட்டணி அமையாததாலும் பிரதமர் இல்லாமல் பெல்ஜியம் நாடு இயங்கி வருகிறது.

இந்நிலையில் பெல்ஜியம் நாட்டு நிதிநிலை அறிக்கை அமைச்சர் சோபி வில்லியம்ஸ் தற்காலிக பிரதமராகப் பொறுப்பு ஏற்பார் என சார்லஸ் மிச்சல் அறிவித்துள்ளார்.   சுமார் 44 வயதாகும் சோபி வில்லியம்ஸ் பெல்ஜியம் நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆவார்.  இவருக்கு விரைவில் அந்நாட்டு அரசர் பிலிப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.