வரலாற்றில் முதல் முறையாக இந்தியக் கடற்படை தலைமை மருத்துவ அதிகாரிகள் ஆன தம்பதியர்

கொச்சி

ந்தியக் கடற்படை வரலாற்றில் முதல் முறையாகக் கணவன் மனைவி இருவரும் தலைமை மருத்துவ அதிகாரிகளாகப் பதவி ஏற்றுள்ளனர்.

விசாகப்பட்டினம் கிழக்கு கடற்படை பிரிவில் ரியர் அட்மிரல் சி எஸ் நாயுடு என்பவர் தலைமை மருத்துவ அதிகாரியாக பணி புரிந்து வருகிறார்.  இவருடைய மனைவி ஆர்த்தி சரின் என்பவரும் ஒரு மருத்துவர் ஆவர்.  இவர் விசாகபட்டினம் திம்பனி பள்ளியில் பயின்று அதன் பிறகு ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் 1985 ஆம் ஆண்டு மருத்துவர் பட்டம் பெற்றார்.

அதன் பிறகு அவர் இரண்டு எம் டி பட்ட மேற்படிப்பையும் முடித்துள்ளார்.  அவர் அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் காமா நைஃப் அறுவை சிகிச்சையில் பயிற்சி பெற்றுள்ளார்.   இந்திய கடற்படையில் இவர் விசாகப்பட்டினம், போர்ட் பிளேயர், கொச்சி, மும்பை உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணி புரிந்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி முதல் கொச்சியின் பணி புரியும் இவர்  கோவிட் 19 தொற்றுக்கு எதிரான பணிகளை வடிவமைத்துச் செயல்படுத்தி வந்தர்.  இவர் தெற்கு கடற்படையில் தனிமை மையம் அமைப்பதில் பெரும் பங்கு வகித்துள்ளார்.   தற்போது இவர் பதவி உயர்வு பெற்று கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை பிரிவில் தலைமை மருத்துவ அதிகாரியாகப் பொறுப்பு ஏற்றுள்ளார்.

இந்தியக் கடற்படை சரித்திரத்தில் கணவன் மனைவி இருவரும் தலைமை மருத்துவ அதிகாரிகளாகப் பதவி வகிப்பது இதுவே முதல் முறையாகும்.   அத்துடன் ஒரு பெண் தெற்கு கடற்படைப் பிரிவின் தலைமை மருத்துவ அதிகாரி பொறுப்பு வகிப்பதும் இதுவே முதல் முறையாகும்.