அமராவதி:

ந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து ஜாதியினருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அதிரடியாக  5 துணை முதல்வர்களை ஜெகன்மோகன் ரெட்டி நியமனம் செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். அவர்களுடன் மேலும் 25 அமைச்சர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் நாளை பதவி ஏற்க உள்ளனர்.

நடைபெற்று முடிந்த லோக்சபா மற்றும் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி  பெற்றது. சட்டப்பேரவையில் தேர்தலிலும் அமோக வெற்றி பெற்ற ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. அதைத்தொடர்ந்து, முதல்வரா கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த மே மாதம் 30ந்தேதி முதல்வராக பதவி ஏற்றார்.

இந்த நிலையில், தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் 5 துணை முதல்வர் உள்பட 25 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு உள்ளது. ஜாதிய அடிப்படையில் துணை முதல்வர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு மாநில அரசில் ஒரே நேரத்தில் 5 துணைமுதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளது இந்திய வரலாற்றில் இதுதான் முதன்முறை என்று கூறப்படுகிறது.

175 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஆந்திர மாநிலத்தில் லோக்சபா தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி  151 இடங்களில் வெற்றி பெற்றது.  இதையடுத்து கடந்த மே மாதம் 30ந்தேதி ஆந்திர முதல்வராக  ஜெகன் பதவி ஏற்றார்.

அதையடுத்து பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து மக்களிடையே மேலும் வரவேற்பை பெற்று வருகிறார். முதல் கையெழுத்திலேயே முதியோர்களுக்கான உதவி தொகையை உயர்த்திய ஜெகன் தொடர்ந்து பல்வேறு அதிரடி நலத்திட்டங்களும் அறிவித்து  உள்ளார்.

இந்த நிலையில் இன்று தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்து உள்ளார். அதன்படி, இந்தியாவிலேயே இதுவரை யாரும் செய்யாத சாதனையாக 5 துணை முதல்வர்களை நியமித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனது அமைச்சரவையில் அனைத்து ஜாதியினருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில்,  பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் காப்பு சமூகம் என பிரித்து சமூகத்துக்கு ஒரு துணை முதல்வர் பதவி வழங்கியுள்ளார்.

மேலும், 25 எம்எல்ஏக்களும் அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் நாளை பதவி ஏற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.