டில்லி,

சென்னை ஹைகோர்ட் நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். நீதி மன்ற அவமதிப்பு வழக்கில்  நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

இதுபோன்ற பதவியில் உள்ள நீதிபதி ஒருவருக்கு தீர்ப்பு வழங்கப்படுவது இந்தியாவிலேயே இது முதல்முறை.

சென்னை ஐகோர்ட்டில் பணியாற்றியபோது,  தன்னுடன் பணியாற்றிய நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறி ஐகோர்ட்டு, பிரதமர் அலுவலகம், சட்டத்துறை அமைச்சகம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு  கடிதங்களை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து  கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நீதிபதிகர்ணன் கொல்கத்தா ஹைகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.

ஆனால், நீதிபதி கர்ணனோ,  தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவை வழக்காக எடுத்து, அதற்கு தானே தடை விதித்துக் கொண்டார்.

இதுகுறித்து மீண்டும் சுப்ரீம் கோர்ட்டு விசாரணை செய்து, நீதிபதி கர்ணனுக்கு கண்டனம் தெரிவித்தும், அவரது உத்தரவை தடை செய்தும் உத்தரவிட்டது. மீண்டும் அவரை கொல்கத்தா உயர்நீதி மன்றத்துக்கு மாற்றியது.

இதுகுறித்து நீதிபதி கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக சுப்ரீம் கோர்ட் பெஞ்சு விசாரணைக்கு எடுத்து விசாரித்தது.

 

இவ்வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோக்கூர், பி.சி.கோஸ், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய 7 நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த மத்திய அரச வழக்கறிஞர்  முகுல் ரோத்தகி, ‘நீதிபதி கர்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

அப்போது பேசிய தலைமை நீதிபதி கேஹர், ‘சுப்ரீம் கோர்ட் இதுவரை எந்தவொரு நீதிபதி மீதும்,  இப்படி ஒரு நடவடிக்கை எடுத்ததில்லை. எனவே,  நடவடிக்கை எடுக்கும்முன்பு, அனைத்து நடைமுறைகளை யும் பின்பற்றி கவனமுடன் செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து நீதிபதி கர்ணன்மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கூறி, கோர்ட்டில் நேரில்ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

மேலும், அ அவர் தன்னிடம் உள்ள நீதிமன்ற பணிகள் மற்றும் நிர்வாக ஆவணங்களை உடனடியாக கொல்கத்தா ஹைகோர்ட் பதிவாளரிடம் ஒப்படைத்துவிட்டு, நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆனால் நீதிபதி கர்ணன் ஆஜராக மறுத்துவிட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

தமக்கு எந்த ஒரு வழக்கையும் ஒதுக்கீடு செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு நீதிபதி கர்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்த கர்ணன், ஜாதிவெறியுள்ள இந்த நாட்டை விட்டு தாம் வெளியேறப் போவதாகவும் அவர் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று நீதிபதி கர்ணன்  ஆஜரானார்.

அதைத்தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. அப்போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், கர்ணன் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளாரா அல்லது இது பற்றி தானாக அல்லது வக்கீல் வைத்து வாதாட விரும்புகின்றாரா என கேள்வி எழுப்பினர்.

அப்போது குறுக்கிட்டு பேசிய மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், இந்த வழக்கில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கர்ணன் அனைத்தையும் தெரிந்தே செய்துள்ளார் என குற்றம்சாட்டினார்.

ஆனால், அதை எற்க மறுத்த உச்சநீதி மன்ற நீதிபதிகள், நீதிபதி கர்னனின்  மனநிலை தெளிவாக இல்லை என நாங்கள் கருதுகிறோம். அவர் என்ன செய்தார் என்பதை புரிந்து கொள்ள முடியாதவராக உள்ளார் என்றனர்.

அப்போது நீதிபதி கர்ணன் கூறுகையில், எனது பணியை செய்ய நீங்கள் அனுமதித்தால், எனது இயல்பான நிலைக்கு திரும்புவேன் என்றும்,  அனுமதி தரவில்லை என்றால் அடுத்த முறை ஆஜராக மாட்டேன். என்னை சிறைக்கு அனுப்பிக்கொள்ளுங்கள் எனக்கூறினார்.

நீதிபதி சி.எஸ்.கர்ணன

நீதிபதி கர்ணனின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்க தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து உச்ச நீதி மன்ற நீதிபதிகள் வெளிநாடு செல்ல தடை விதித்து நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார். மேலும் தன்னை உச்சநீதி மன்றத்திற்கு வரவழைத்து  மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக  ரூ.14 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் கடிதம் எழுதி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதைத்தொடர்ந்து உச்சநீதி மன்றம் நீதிபதி கர்ணனுக்கு மனநிலை பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.

இதையடுத்து, மனநிலை மருத்துவர்கள் நீதிபதி கர்ணன் வீட்டுக்கு சென்று மனநிலை பரிசோதனை செய்ய முயன்றனர். அதற்கு ஒத்துழைக்க அவர் மருத்துவிட்டார்.

நான் நல்ல மனநிலையிலேதான் இருக்கிறேன் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் என் வீட்டில் ஆஜராகணும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தார். அப்படி ஆஜராக தவறினால் அவர்கள் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து அவரது மீதான அவமதிப்பு வழக்கு விசாரணை இன்று மீண்டும் உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அவருக்கு மனநிலை மருத்துவ பரிசோதனை செய்ய இயலாது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டது.

மேலும் கர்ணன் வெளியிடும் உத்தரவுகளை பிரசுரிக்க ஊடகங்களுக்கும் தடை விதித்தனர்.

நீதிபதி கர்ணன் சென்னை ஹைகோர்டில் அவர் பணியாற்றியபோது, 12 வழக்குகள் தொடர்பான ஆவணங்களை அவர் ஒப்படைக்கவில்லை என்றும், அவருக்கு சென்னையில் ஒதுக்கப்பட்டுள்ள குடியிருப்பை இன்னும் காலி செய்யவில்லை என்றும் சென்னை ஹைகோர்ட்டு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புகார் தெரிவிக்கப்பட்டது.

தற்போது நீதிமன்ற வரலாற்றில் ஹைகோர்ட் நீதிபதி ஒருவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, சிறை தண்டனை விதித்திருப்பதும் இந்திய வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.குறிப்பிடத்தக்கது.