சென்னை:

பெட்ரோல் விலை கொரோனாவை போல நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது.  இன்று தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலையை விட டீசல் விலை உயர்ந்துள்ளது. இது   வாகன ஒட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் கடந்த 15 நாட்களையும் தாண்டி தொடர்ந்து, விலை உயர்ந்து வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா ஊரடங்கால் வாடிப் போய் உள்ள மக்களை  பெட்ரோல் டீசல் விலை உயர்வும் மக்களை மேலும் வாட்டி வருகிறது.

சென்னையில் இன்று (ஜூன் 24), நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி  நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறத. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.83.04 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.77 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேவேளையில் மற்ற மாநிலங்களில் விலை மாற்றம்  ஏற்பட்ட உள்ளது. டெல்லியில், இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோலை விட டீசல் விலை உயர்ந்துள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக டீசல் விலை பெட்ரோல் விலையை விட எப்போதும் குறைவாக தான் இருக்கும். தொடக்க காலத்தில் பெட்ரோலின் பாதி விலைதான் டீசல் விலையாக இருக்கும். ஆனால் கடந்த  சில வருடங்களாக டீசல் விலையும் தொடர்ந்து ஏறிக்கொண்டே வருகிறது. பெட்ரோலுக்கு சமதாக அதன் விலை உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில்,  முதல் முறையாக டெல்லியில் டீசல் விலை பெட்ரோல் விலையைவிட அதிகரித்துள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.76க்கு விற்கப்படும் நிலையில், டீசல் ரூ.79.88க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 17 நாட்களில் மட்டும் பெட்ரோல்  விலை 7 ரூபாய் 50 காசும், டீசல் 8 ரூபாய் 55 காசும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.