தமிழ்த்திரை உலக வரலாற்றில் முதல் முறையாக…  தியேட்டர்களுக்கு செல்லாமல்

குப்பையில் வீசப்பட்ட பாலா படம்…..

100 ஆண்டுகளை கடந்துள்ள தமிழ் சினிமா சரித்திரத்தில் ,முழுதாக எடுத்து முடிக்கப்பட்ட ஒரு திரைப்படம் – குப்பைக்கூடையில் வீசப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இத்தனைக்கும் ’டிராப்’செய்யப்பட் ட ‘வர்மா’ என்ற படத்தோடு பயணித்த ஆட்கள்  சாமான்யர்கள் இல்லை.

தேசிய விருது பெற்ற பாலா –இயக்குநர்.மலையாள சினிமாவின் வியாபாரத்தை தீர்மானிக்கும் ஈ-4 ‘என்டர்டெய்ன் மெண்ட்-‘தயாரிப்பு.விக்ரமின் மகன்-துருவ்-கதாநாயகன் என பலமான கூட்டணியில் உருவான படம் பரணில் கடாசப்பட்டிருப்பது கோடம்பாக்கத்தை தாண்டி மோலிவுட்,பாலிவுட் என அனைத்து ஏரியாக்களையும் அதிர வைத்துள்ளது.

வேரில் இருந்து விஷயத்தை தொடங்கலாம்.

தெலுங்கில் விஜய் தேவர கொண்டா நடித்து ,சந்தீப் வங்கா இயக்கிய படம்-அர்ஜுன் ரெட்டி.2017-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தெலுங்குமட்டுமல்லாது தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட படம்.

இந்த படத்தை ‘கபீர்சிங்’என்ற பெயரில் சந்தீப்பே இந்தியில்  இயக்கினார்.

அர்ஜுன் ரெட்டியை தமிழில் தயாரிக்கும் உரிமையை பெற்ற ஈ-4  நிறுவனம் பாலாவை இயக்குநராக ஒப்பந்தம் செய்தது.

கதாநாயகனாக விக்ரம் மகன் துருவையும், நாயகியாக வங்காள நடிகை மேகாவையும் வைத்து ‘வர்மா’வை  ஆரம்பித்தார்.

முதல் காப்பி  அடிப்படையில் படத்தை முடித்து தருமாறு ஒப்பந்தம் போடப்பட்டு- பாலாவுக்கு 15 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும்.சில நாட்களுக்கு முன்பு தான் தயாரிப்பாளரிடம் முழுப்படத்தையும் கொடுத்துள்ளார் –பாலா.

படத்தை பார்த்த தயாரிப்பாளர் அதிர்ந்து போனார்.

ஒரிஜினலில் இருந்த ஜீவன் –ரீ-மேக்கில் இல்லை.

சினிமா துறை பி.ஆர்.ஓ.-ஒருவர் நடந்த சம்பவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

‘’ஒரிஜினல் படம்- 3 மணி நேரம் ஓடக்கூடியது.வர்மா 2 மணி நேரம் தான். மூலப்படத்தில் இருந்த முக்கிய விஷயங்கள் வர்மாவில் இல்லை. துருவுக்கு சம்பளம் கிடையாது. நாயகிக்கும் கிட்டத்தட்ட அதுவே. பாலாவுக்கு கொழுத்த லாபம்.

படத்தை பார்த்த துருவ்-அப்பா விக்ரமிடம் கதறி விட்டார். ’’இந்த படம் வெளிவந்தால் எனது  எதிர்காலம் சூன்யமாகி விடும்..’’என குமுற –தயாரிப்பாளர் தரப்புடன்  விக்ரம் பேச்சு நடத்த- வர்மாவை முடக்குவது என்று முடிவானது.

அதே தயாரிப்பாளருக்கு- ஓசியில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் துருவ். தெலுங்கு ஒரிஜினல் படம்- வேறு ஒருவர்  டைரக்ஷ்னில் விரைவில் உருவாகும்.’’என்றார் அந்த பி.ஆர்.ஓ.நண்பர்.

முழுதும் முடிந்த ஒரு  திரைப்படம் –தியேட்டர்களுக்கு செல்லாமல் அடைக்கப்படுவது –இங்கே இதுவே முதல் முறை.

—பாப்பாங்குளம் பாரதி