டில்லி:

ந்தியா வருகை தரும் சீனஅதிபரை, பிரதமர் மோடி தமிழகத்தின் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதன்முறையாக இருநாட்டு தலைவர்கள் சந்திக்கும் நிகழ்வு தமிழகத்தில் நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந்தேதி சீனா சென்ற பிரதமர் மோடி, அங்கு சீனஅதிபர்  ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டு அதிபர்களும், இந்தியா-சீனா இடையே உறவுகளை மேம்படுத்தவும், சர்வதேச நிலைமைக்கு ஏற்ப பொருளாதார வளர்ச்சிகளை கொண்டுவரவு முடிவு செய்தனர். இது தொடர்பாக மேலும் சந்தித்து பேசி முடிவு செய்தனர். அதன்படி இந்தியாவுக்கு வர சீன அதிபருக்கு மோடி அழைப்பு விடுத்தார்.

மோடியின் அழைப்பை ஏற்ற சீன அதிபர், அடுத்த மாதம் இந்தியா வருகிறார். இதன் மூலம் இந்தியா- சீனா ஆகிய இரு நாட்டுத் தலைவர்களும் 2-வது முறையாக சந்திக்க உள்ளார்கள். இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசும் இடம் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன.

அதன்படி, சென்னை, ஐதராபாத், பெங்களூர், விசாகப்பட்டினம் உள்பட  6 இடங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், தமிழகம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. சென்னை அருகே உள்ள  மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த சந்திப்பு அடுத்த மாதம் (அக்டோபர்)  மாதம் 11-ந் தேதி முதல் 13-ந்தேதிக்கும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், கூறப்படுகிறது.  மோடி, ஜி ஜின்பிங் சந்திப்புக்கான ஏற்பாடுகளை இரு நாடுகளின் உயர் அதிகாரிகளும் செய்து வருவதாகவும், சந்திப்பை தொடர்ந்து இரு தலைவர்களும் மாமல்லபுரம் சிற்பங்களை பார்வையிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்கள் தலைநகர் டில்லியில்தான் சந்தித்து பேசுவது வழக்கம். தற்போது முதன்முறையாக தமிழகத்தில் சீன அதிபர்- இந்திய பிரதமர் சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.