சென்னை:

அரசியல் கட்சியினர் தங்களது தலைவர்களை கவருவதற்கு விதவிதமாக போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. பிறந்தநாள், வரவேற்பு, திருமணம், பொதுக்கூட்டம், தேர்தல் பிரசாரம் என்று இருந்த போஸ்டர் கலாச்சாரம் தற்போது சசிகலவால் ஒரு படி முன்னேறி அனைவரையும் ஆச்சர்யத்தில் தள்ளியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, தனது உடல் நிலை சரியில்லாத கணவர் நடராஜனை சந்திக்க 5 நாள் பரோலில் வந்தார். பரோவில் அவர் சென்னை திரும்பிய போது வருக!! வருக!! என்று அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் அச்சடித்து பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

ஆனால், தற்போது மேலும் ஒரு ஆச்சர்யம் அதை மிஞ்சும் அளவுக்கு நடந்துள்ளது. அவருக்கு இன்றுடன் பரோல் முடிந்துவிட்டது. இதனால் அவர் மீண்டும் பெங்களூரு சிறைக்கு இன்று சென்றார். அதற்கும் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் அச்சடித்து ஓட்டி அனைவரையும் கலங்கடித்துள்ளனர். ‘‘சென்று வாருங்கள் அம்மாவின் அன்பே! தியாகத்திருவுள்ளமே’’ என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை பார்த்து மக்கள் தலையில் அடித்துக் கொண்டு செல்வதை தான் பார்க்க முடிந்தது.