2019ம் ஆண்டின் முதல் போட்டி: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜனவரி 2ந்தேதி ஜல்லிக்கட்டு

சென்னை:

2019ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 2ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடை பெற உள்ளது.  இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் ஜனவரி 2-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்றும், அதில் பங்கேற்க 800 காளைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் போட்டியில் கலந்துகொள்ள 300 மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி, தமிழர்களின் அமைதி போராட்டம் காரணமாக மீண்டும் உயிர்ப்பெற்றது.  அதைத்தொடர்ந்து    ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை தமிழகத்தில் தடையின்றி நடத்துவதற்கு வசதியாக கடந்த 2017ம் ஆண்டு தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. அதற்கு மத்திய உள்துறை அமைச்சகமும், அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன.