பாகிஸ்தான்: முதல் திருநங்கை செய்திவாசிப்பாளர்!

 

பாகிஸ்தானில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் செய்தி வாசிப்பாளராக உருவெடுத்துள்ளார்.

பாகிஸ்தானில்  ‘கோஹினூர் செய்தி’ என்ற உள்ளூர் தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது.  ஏறத்தாழ பத்து வருடங்களாக அங்கு செயல்பட்டுவரும் இந்தத் தொலைக்காட்சி, மறு சீரமைப்பு செய்து, புது வடிவில் மாற்றியமைக்கப்பட்டு, கடந்த வெள்ளிக் கிழமையன்று  தனது ஒளிபரப்பை துவங்கியது.

அன்று மரிவியா மாலிக் என்ற திருநங்கையை செய்தி வாசிப்பாளராக அந்தத் தொலைக்காட்சி அறிமுகம் செய்தது.

கடந்த சில வருடங்களாக பாகிஸ்தான் அரசு, திருநங்கைகளுக்காகப் பல சலுகைகளையும் திட்டங்களையும்  அறிவித்துவருகிறது.  திருநங்கைகள் தங்கள் பாலின அடையாளத்தை முடிவுசெய்யும் அதிகாரம், பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை உயர்த்திக்கொள்ள மசோதா ஆகியவை சமீபமாக அங்கு நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், அங்குள்ள தொலைக்காட்சியில் திருங்கை  மாலிக் செய்தி வாசிக்க ஆரம்பித்திருப்பது, அந்நாட்டு திருநங்கைகளிடையே புத்துணர்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.