சென்னை

மீன்கள் விலை இருமடங்காகி உள்ளது.

கடந்த சில நாட்களாக சந்தையில் மீன்கள் விலை  திடீரென்று அதிகரித்துள்ளது.   தற்போது மீன் வகைகளில்,  பாரா, கவலா மற்றும் கெளுத்தி மீன்களே அதிகம் விற்பனைக்கு வந்துள்ளது.   இவைகளின் விலையும் வழக்கத்தை விட இருமடங்கு அதிகரித்துள்ளது.   அது மட்டுமின்றி  இவைகளின் தரமும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மீனவர்கள் சங்கத்தை சேர்ந்த பிரமுகர் ஒருவர், “தட்ப வெப்ப நிலை காரணமாக பலர் மீன் பிடிக்க ஆழ்கடலுக்குச் செல்லவில்லை.  அது மட்டுமின்றி பல மீனவர்கள் தற்போது சபரிமலைக்கு சென்றுள்ளனர்.    ஒரு சில மீனவர்கள்  மட்டுமே உள்ளனர்.  அவர்களிலும் சிலர் கடந்த ஞாயிறு அன்றுதான் ஆழ்கடலுக்கு சென்றுள்ளனர்.   எனவே அவர்கள் திரும்பிய உடன் தற்போதுள்ள மீன் தட்டுப்பாடு குறைந்து விலையும் வீழ்ச்சி அடையும்.

ஒரு சில மீனவர்கள் மட்டும் சிறிய படகுகளில் சுமார் 4-5 கிமீ தூரம் சென்று பிடித்து வரும் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது.   அவைகள் அளவில் குறைவாக உள்ளன.    அதனால் விலை அதிகரித்துள்ளது.    சபரிமலைக்கு சென்றுள்ளவர்கள் திரும்பி வந்து மீன் பிடிக்கச் சென்றால் மேலும் விலை குறையும்.

அது மட்டுமின்றி மத்திய பா ஜ க அரசு எங்களுக்கு ஒயர்லெஸ் கருவி இலவசமாக அலிப்பதாக அறிவித்திருந்தது.   ஆனால் இன்று வரை தரவில்லை.   சுமார் 7500 ரூபாய் மதிப்புள்ள இந்த கருவி இலவசமாக அளிக்கப் போவதாக அரசு அறிவித்திருந்தது.    ஆனால் மீன்வளத்துறை அதிகாரிகள் எங்களிடம் இருந்து தலா ரூ.500 வசூல் செய்தனர்.  ஆனால் இன்று வரை அவைகள் வழங்கப்படவில்லை.  அது தவிர எஞ்சினுக்கு மாநில அரசு தர வேண்டிய ரூ. 22000 இன்னும் வழங்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.