கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த மீனவரான 30 வயது பிரியேஷ், தனது சொந்த முயற்சியால் கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 3.5 டன் பிளாஸ்டிக் குப்பைகளை கடலிலிருந்து மீட்டுள்ளார்.

இந்த மீனவரின் போற்றத்தக்க சேவை குறித்து கூறப்படுவதாவது; கடந்த 14 வயது முதலே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று வருகிறார் பிரியேஷ். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, இவரின் வலையில் மீன்களுக்கு நிகராகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ பிளாஸ்டிக் குப்பைகளும் சிக்கியுள்ளது.

அப்போது நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பிரியேஷ், தன்னால் முடிந்தளவிற்கு, சொந்த முயற்சியின் மூலம் கடலிலிருந்து பிளாஸ்டிக் குப்பைகைளை அப்புறப்படுத்த வேண்டுமென்ற இலட்சியத்தை மேற்கொண்டார்.

அதன்படி, வெறும் 2 மாதங்களில், கடலிலிருந்து 3.5 டன் பிளாஸ்டிக் குப்பைகளை தனது சொந்த முயற்சியின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார். ஏழைக் குடும்பத்தில் பிறந்த பிரியேஷால், புத்திசாலி மாணவராக இருந்தாலும் 8ம் வகுப்பிற்குமேல் படிப்பைத் தொடர முடியவில்லை.

எப்படியும் 10ம் வகுப்பை முடித்துவிட வேண்டுமென்று இவர் பயிற்சி வகுப்புக்கு சென்ற நிலையில்தான், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், சுற்றுச்சூழலுக்கான தனது சேவையை தனிப்பட்ட முறையில் தொடங்கிய பிரியேஷ், கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும்போதெல்லாம், பிளாஸ்டிக் குப்பைகளை எடுத்துவரும் வேலையையும் செய்துள்ளார். அதன்படி, கடந்த 2 மாதங்களில் மட்டும் 3.5 டன் பிளாஸ்டிக் குப்பைகளை வெளியேற்றியுள்ளார்.

“பிளாஸ்டிக் அதிகம் இருக்கும்போது, அந்த இடத்தில் எங்களுக்கு மீன்களும் கிடைக்காது. எனவே, பிளாஸ்டிக்கை அகற்றிய பின்னர், அந்த இடத்தில் எங்களுக்கு மீன்கள் அதிகம் கிடைத்தது” என்கிறார் பிரியேஷ்.

இவரின் போற்றத்தக்க சேவை தொடரட்டும்..!