மதுரை:

ஓகி புயலால் சிக்கி காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கக்கோரிய வழக்கு சென்ன உயர்நீதி மன்ற  தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஓகி புயல் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் இன்னும் திரும்பாத நிலையில், அவர்களை கண்டுபிடித்து தரும்படி அரசுக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் கடந்த 22ந்தேதி விசாரணையின்போது, கேரள அரசு, அம்மாநில மீனவர்களை தேடுவது போல் தமிழகஅரசு தமிழக மீனவர்களை தேடுவதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கு பதில் அளித்த தமிழக அரசு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் காணமல் போன அனைத்து தமிழக மீனவர்களும் மீட்கப்படுவர்கள் என கூறியது. மேலும் மீட்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களையும் தெரிவித்தது.

 

இதற்கு மனுதாரர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு பதில் அளிக்க கால அவகாசம் தேவை என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றுவதாக உத்தரவிட்டார்.