மெரினாவில் மீனவர் போராட்டம்? பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை,

கி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.  அவர்களை மீட்க்கோரி அம்மாவட்ட மீனவர்கள், பொதுமக்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மெரினாவில் மீண்டும் ஜல்லிக்கட்டு போராட்டம் போல மீனவர்கள் போராட்டமும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மீனவர்களும் இன்று காலை நொச்சிக்குப்பம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் வாக னங்களில் ஏற்றிச்சென்று, போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ள பகுதியான சென்னை பிரஸ்கிளப் அருகே சென்று போராட அனுமதித்தனர்.

முதல்வர் மற்றும் பிற அமைச்சர்கள் உடனடியாக குமரி மாவட்டத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இறந்துபோன மீனவர்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

சென்னை  திருவல்லிக்கேணி முதல் கோவளம் வரை உள்ள மீனவர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சென்னையில் போராடி வரும் மீனவர்கள் முதல்வரை சந்திக்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர். மேலும், கோட்டை நோக்கி பேரணியாக சென்று முற்றுகையிட முடிவெடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்,  ஜல்லிக்கட்டு போல போராட்டம் மீனவர்கள் போராட்டம் உருவெடுத்து விடுமோ என்ற அச்சம் காரணமாகவும், கடல்வழியாக மீனவர்கள் மெரினாவில் வராதவாறு கண்காணிப்பு பணிகளையும் போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடற்கரை உள்சாலை முழுவதும் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்கவில்லை.