வடசென்னை படத்துக்கு மீனவ அமைப்பு எதிர்ப்பு

டசென்னை படத்துக்கு தென்னிந்திய மீனவர் நலச் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ..

இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர்  கு.பாரதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

“வடசென்னை படத்தின்  இயக்குநர் வெற்றி மாறன், நடிகர் தனுஷ்,தயாரிப்பு நிறுவனம் லைக்கா ஆகியோருக்கு ஒரு வேண்டுகோள்!.

பழங்குடி மீனவ சமூகத்தை குற்றப் பின்னணி உள்ள சமூகமாக காட்டுவதை  வன்மையாகக் கண்டிக்கிறோம்.

வியர்வை சிந்தி உழைக்கும் அடித்தட்டு சமூக மக்கள் நிறைந்த வட சென்னையை, சினிமா வெற்றி எனும் லாப நோக்கத்திற்காக  இன்னும் எத்தனை ஆண்டுகள் நெகடிவ் ஏரியாவாக  (கருப்பு ஏரியாவாக) காட்டப்போகிறீர்கள்?

வட சென்னை படமாக்கப்பட்டிருக்கும் இடமும், கதைக்காக கையாளப்பட்டிருக்கும் கதாபாத்திரங்களும் மீனவ சமுதாயத்தை கொச்சை படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகள் மூலம்  மீனவர்கள் கடலில் திருட்டு,கடத்தல்,ஆள் கடத்தல் போன்ற தொழில்களை செய்து வருவது போலவும், கரையில் கொலை, கட்ட பஞ்சாயத்து,அடிதடிகளில் ஈடுபடுபவர்களாகவும், பெண்களை ஆபாசமாகவும்,கொச்சையாக பேசுபவர்களாக காட்டியுள்ளது மீனவமக்களிடையே  மிகுந்த மன வருத்தத்தையும், வேதனையையும் தந்துள்ளது.

சிங்காரவேலர் நற்பணி மன்றம் மூலம் இளைஞர்களை நல்வழிப்படுத்த ஊக்குவிக்கும் காட்சியும்,சில வசனங்கள் மீனவமக்களுக்கு ஆறுதலாக இருந்தாலும்,

சாலை விரிவாக்கப் பணிகளுக்காக கடலோர கிராமங்களை அகற்ற, பன்னாட்டு நிறுவனங்கள் கொண்டு வரும் திட்டங்கள்,அதை செயல்படுத்த அரசும், அரசியல்வாதிகள் எடுக்கும் முயற்சியை  முறியடிக்க மக்கள் வன்முறையில் இறங்குவது தான் ஒரே வழி என்பதாக சொல்லப் பட்டுள்ளது.

உலகின் மிக ஆபத்தான  தொழில்களில் ஒன்றான மீன்பிடித் தொழிலை மீனவமக்கள் பாரம்பரியமாக செய்து வருகின்றனர்.

மீனவமக்கள் வருமானமின்றி இருந்ததுண்டு, வேலையின்றி இருந்ததில்லை. காசிமேட்டில்  மீனவர்கள் மட்டுமின்றி லட்சக்கணக்கான மாற்று சமுதாய மக்கள் மீன்பிடி மற்றும் சார்பு தொழிலில் ஈடுபட்டு வருமானம் ஈட்டிவருகின்றனர்.

சென்னை மக்களுக்கு கலப்படமற்ற,பல்வேறு வகையான சத்துள்ள கடல் உணவுப் பொருட்களையும், மீன்கள் ஏற்றுமதி மூலம் இந்திய நாட்டிற்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை அன்னியச் செலாவணியாக ஈட்டியும் தருகின்றனர்.

சென்னையில் புயல்,மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படும் போது,சமூக அக்கறையுடன் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மீனவ இளைஞர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருவதை நாடறியும். காசிமேடு மீன்பிடித்

துறைமுகத்தில் நள்ளிரவு முதல் காலை வரை சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் இருந்து ஆயிரக் கணக்கான மீன் வியாபாரிகளும், மீனவமகளீர்களும் மீன்களை ஏலம்எடுத்து  மீன்வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதை பார்த்த பின்பும் மீனவப் பெண்ணை ஆபாசமாக இருப்பது போன்றும்,

கொச்சையாக பேசுவது போன்றும் எப்படி உங்களால் காட்ட முடிந்தது. மீன்பிடி படகுகள்,பல்வேறு வகையான மீன்பிடி வலைகள் என ஒவ்வொரு மீனவர்களின் முதலீடு கோடிக்கணக்கான ரூபாய்களாகும்.

கடல் எங்கள் தாய் கடற்கரை எங்கள் தாய்மடி என வாழ்ந்து வரும் மீனவமக்களை தங்களது சினிமா சுய லாபத்திற்காக கொச்சைபடுத்தியதற்கு

திரைப்பட இயக்குநர் வெற்றி மாறன்,நடிகர் தனுஷ்,தயாரிப்பு நிறுவனம் லைக்கா

வருத்தத்தையும் விளக்கத்தையும் அளிக்க வேண்டும்.

மேலும் தங்களுக்கு வருமானம் கிடைக்கிறது என்பதற்காத மீனவர்களையும், மீன்பிடித் தொழிலையும்  கொச்சைப்படுத்தி எடுக்கப்படும் சினிமா சூட்டிங்கிற்கு சென்னை மீன்பிடித் துறைமுக வளாகத்திற்குள் அனுமதி அளிக்கும் சென்னை துறைமுக நிர்வாகத்தை  வன்மையாகக் கண்டிக்கிறோம்.இது போன்ற சினிமா சூட்டிங்கிற்கு மீண்டும் அனுமதியளித்தால் சென்னை துறைமுக நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..