நாகர்கோவில்:

ன்னியாகுமரி பகுதியில் சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் இணையம் பகுதியில் சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுகம் அமைக்க 28 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு ஆய்வு பணிகள் நடைபெற்றன.

இந்த திட்டத்திற்கு மீனவர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, மணக்குடி பகுதிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், மணக்குடி பகுதி மீனவர்கள் சார்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் கோரியும் போராட்டம் கன்னியாகுமரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்று வருகிறது.

போலீசார் போராட்டத்துக்கு தடை விதித்துள்ள நிலையில், அந்த பகுதியை சுற்றி உள்ள மீனவர்களும், அவர்களது குடும்பத்தினரும், அரசுப் பேருந்துகள் மூலம்   நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகம் நோக்கி புறப்பட்டனர். அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்திய போலீசார், திருப்பி அனுப்பினர்.

இதனால், ஆத்திரமடைந்த மீனவர்களும், பொதுமக்களும், மணக்குடி பாலத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர் இதன் காரணமாக போக்குவரத்து முடங்கியது.

இந்த போராட்டத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக  திமுக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்  சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ், ஆஸ்டின், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.