ராமேஸ்வரம்:

த்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீனவர்களிடையே நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டதாக வெளியான தகவல் தவறு என மீனவர் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரம்  தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ கடந்த 6 தேதியன்று இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து பிரிட்ஜோவை சுட்டு கொன்ற இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து கடந்த 6 நாட்களாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மீனவர்களுடன் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

மீனவர் பிரிட்ஜோவின் உடலை பெற்று நாளை அடக்கம் செய்யப்படும் என்று  போராட்டக்குழு தலைவர் ஜேசுராஜ் தெரிவித்தார்.

ஆனால், மீனவர் சங்க  தலைவர் எமரால்டு இத்தகவலை மறுத்துள்ளார். போராட்டத்தை திசை திருப்ப சிலர் முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதேபோல் நாளை(திங்களன்று) திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.   .