பார்மர், ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தில் இதுவரை 5000 கோடி லிட்டர் கச்சா எண்ணை திருட்டு நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.  இந்த விவகாரத்தில் இதுவரை 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மரில் உள்ளது கேர்ன் இந்தியா ஆயில் ஃபீல்ட் என்னும் எண்ணை சுத்திகரிப்பு நிலையம். இங்கு பல வருடங்களாக கச்சா எண்ணெய் திருடப்பட்டு வந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதில் பல மாநிலத்தை சேர்ந்த பெரிய கும்பலே ஈடுபட்டுள்ளது.  இது வரை 31 பேர் கைதான நிலையில் கைதுகள் மேலும் தொடரக்கூடும் என ராஜஸ்தான் போலிஸ் தெரிவிக்கிறது.

கைது செய்யப்பட்டவர்களில் 17 ஆயில் டேங்கர்கள் ஓட்டுனரும், நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் சிலரும் அடங்குவர்.  இந்த திருட்டில் இதுவரை உத்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ளவர்களுக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது.  மேலும் பல மாநிலங்களில் உள்ளவர்களும் விரைவில் சிக்குவார்கள்.

நேற்று இரண்டு லாரிகள் சோதனையில் சிக்கின  அதை ஓட்டி வந்த சதாராம் மற்றும் தர்மாராம் விசாரணையில் அந்த கச்சா எண்ணெயை ஆலையிலிருந்து 12 கிமீ உள்ள ஊரில் வசிக்கும் பூர் சிங், மற்றும் கௌதம் சிங்க் என்பவர்களிடம் தாங்கள் விற்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

கௌதம் இதை லிட்டருக்கு ரூ. 7.50 க்கு வாங்கி வெளியில் அதிக விலைக்கு விற்கிறார்  லாரி உரிமையாளர் இதில் ரூ 4 தனக்கு வைத்துக் கொண்டு மிச்சத்தை ஆலை ஊழியர்களுக்கு கொடுத்து விடுவார்.  இதில் ஊழியர்களுடன், பல அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாக தெரிகிறது.

இந்த டேங்கர்கள் தண்ணீர் லாரிகள் என்னும் பெயரில் உள்ளே வருகின்றன.  இங்குள்ள தண்ணீரை டேங்கர்கள் மூலம் வெளியே கொண்டு செல்லும் ஒப்பந்த வண்டிகள் இவை.  அதில் உள்ள ஐந்து கம்பார்ட்மெண்டுகளில் இரண்டில் மட்டும் தண்ணீரும், மற்ற கம்பார்ட்மெண்டுகளில் கச்சா எண்ணெயும் வெளியே சென்று விடுகிறது.

இந்த தகவலை தெரிவித்த அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடப்பதாக தெரிவித்துள்ளனர்