மும்பை

ந்தியாவின் மொத்த ஜிடிபியில் 27% அளிக்கும் ஐந்து மாநிலங்கள் ஊரடங்குக்குப் பிறகு மீண்டும் பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளில் முன்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் தேசிய ஊரடங்கை அறிவித்தது.    அதன் பிறகும் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியாத அரசு மீண்டும் மீண்டும் ஊரடங்கை நீட்டித்தது.   இதனால் நாடெங்கும் உள்ள அனைத்து தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் அடியோடு முடங்கின.   ஏற்கனவே சரிவில் இருந்த இந்தியப் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்றுள்ளது.

தற்போதைய ஊரடங்கில் பெரும்பாலான தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளைக் கட்டுப்பாட்டுடன் தொடங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.   இதனால் நாட்டில் பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகள் எவ்விதத்தில் உள்ளது என்பதைக் குறித்து மும்பையைச் சேர்ந்த எலாரா செக்யூரிடிஸ் என்னும் நிறுவனத்தைச் சேர்ந்த கரிமா கபூர் ஒரு கணக்கெடுப்பை எடுத்துள்ளார்.

அந்த கணக்கெடுப்பில் காணப்படுவதாவது :

கொரோனாவை தடுக்க உலகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.  அவ்வகையில் இந்தியாவிலும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் நாட்டின் அனைத்து வர்த்தக மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் அடியோடு முடங்கின,   தற்போது ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் வர்த்தக மற்றும் தொழில் நடவடிக்கைகள் ஓரளவு தொடங்கி உள்ளன.

இந்தியாவின் மொத்த ஜிடிபியில் கேரளா, பஞ்சாப், தமிழகம், மற்றும் அரியானா ஆகிய 5 மாநிலங்கள் 27% பங்களித்து வருகின்றன.  இந்த மாநிலங்களில் பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகள் முழு வீச்சில் தொடங்கி விட்டன என்பதால் இம்மாநிலங்கள் முன்னேறி வருவதாகக் கூற முடியும்.  இம்மாநிலங்களில் மின்சார பயன்பாடு, போக்குவரத்து, மொத்த சந்தைக்கு விவசாயப் பொருட்கள் வருகை உள்ளிட்டவை மிக வேகமாக அதிகரித்து வருகின்றன.

அதே வேளையில் தொழில் மாநிலங்கள் ஆன மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பால் பல இடங்களில் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன   எனவே இம்மாநிலங்கள் வர்த்தக மற்றும் தொழில் நடவடிக்கைகளில் பின் தங்கி உள்ளன.

நாடு முழுவதுமாக ஊரடங்கு படிப்படியாக வரும் 8 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட உள்ளதால் பல இடங்களில் ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் திறக்க உள்ளது.  அதன் பிறகு நாட்டில் மேலும் முன்னேற்ற நடவடிக்கைகள் தொடங்க அதிக வாய்ப்புள்ளது.   நாடு முழுவதும் வழக்கமான வாழ்க்கை தொடங்கிய பிறகு இந்தியா மீண்டும் பழைய நிலைக்கு விரைவில் திரும்பும்.” என இந்த கணக்கெடுப்பு முடிவு குறித்து கரிமா கபூர் தெரிவித்துள்ளார்.