ரோம்: இத்தாலியில் கொரோனா வைரசால் மேலும் 5 மருத்துவர்கள் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

உலகில் அதிவேகமாக பரவி பல ஆயிரம் பேரை பலி வாங்கியுள்ள கொரோனா வைரஸ், சீனாவுக்கு அடுத்தப்படியாக இத்தாலியில் அதிகளவு பரவி உள்ளது.

இத்தாலியில் ஒரே நாளில் 4207 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 475 பேர் ஒரே நாளில் கொரோனா வைரசால் உயிரிழந்து இருக்கின்றனர். இதையடுத்து, அந்நாட்டில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. இந் நிலையில் அந்நாட்டில் மருத்துவர்கள் 5 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர்.

2629 சுகாதார ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். தொடக்கத்தில் பலியான மருத்துவர்களின் எண்ணிக்கை 3 ஆக இருந்தது. இப்போது 13 ஆக உயர்ந்திருக்கிறது. இன்று மேலும் இரண்டு மருத்துவர்கள் காலமானார்கள் என்று இத்தாலிய தேசிய மருத்துவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இத்தாலியில் 2,600 க்கும் மேற்பட்ட மருத்துவத் தொழிலாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நாட்டின் மொத்த விகிதத்தில் 8.3 சதவீதம் ஆகும். இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் வழக்கமான பணிகளுக்கு வரும் முன்னணி மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.

வைரஸ் இருக்கிறதா என்று சோதனை செய்த மருத்துவர் புட்டாஃபூகோ, நோயின் அறிகுறிகளை சமாளிக்க முடியாமல் தமது 66 வயதில் காலமானார். டாக்டர் லூய்கி அப்லோண்டி, 11 ஆண்டுகளாக இயங்கி வந்த க்ரீமாஸ்கோ மருத்துவமனையில் தமது 66 வது வயதில் இறந்தார்.

கியூசெப் லனாட்டியில் உள்ள சாண்ட்ன்னா மருத்துவமனையின் மருத்துவர்கள் லனாட்டி, லூய்கி ஃப்ருசியான்ட் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இறந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் பற்றிய சமீபத்திய புள்ளி விவரங்கள் ஒரு சுகாதார அறக்கட்டளையால் வெளியிடப்பட்டன. அதில், முன் எச்சரிக்ரக மருத்துவ நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள்  இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.