ஐந்து மாநிலத் தேர்தல் முடிவு எதிரொலி?: ராகுல் காந்தியை புறக்கணித்த மோடி

நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தின் நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேருக்கு நேராக பார்ப்பதைக் கூட தவிர்த்து விலகிச் சென்றுவிட்டார் பிரதமர் மோடி.

சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியில் இருந்த  மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டது. (இதில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளித்துள்ளதால், சத்தீஸ்கர், ம.பி. ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது.) காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றபின் அந்தக் கட்சி பெறும் மிகப்பெரிய வெற்றி என்று அக்கட்சியினர் கொண்டாடுகிறார்கள். மேலும்,மோடி அலை ஓய்ந்து ராகுல் அலை எழுந்துள்ளதாக காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளும் புகழ்கின்றன.

இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் புகுந்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் பதினேழாம் ஆண்டு நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாடாளுமன்றத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் அத்வானி மத்திய அமைச்சர்கள், மாநிலங்களவை தலைவர் வெங்கையா  நாயுடு, மக்களவை சபாநாயகர் சுமித்திர மகாஜன், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி,  காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்ச்சிக்கு வந்த ராகுல் காந்தியுடன் ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்ட சில மத்திய அமைச்சர்கள் கைகுலுக்கினர்.

அதே போல, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பிரதமர் மோடி கைகுலுக்கினார்.

ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பேசுவதையும், கைகுலுக்குவதையும் பிரதமர் மோடி தவிர்த்து விட்டார். அஞ்சலி நிகழ்ச்சியின் போது இரு தலைவர்களும் சற்று இடைவெளி விட்டே நின்றுகொண்டிருந்தனர்.

பொதுவாக டில்லியில்  ஆளும் கட்சி தலைவர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் தனிப்பட்ட முறையில் இயல்பாக பேசி பழகுவது வழக்கம். இதற்கு மாறாக ராகுல்காந்தியை மோடி புறக்கணித்தது வட இந்தியாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.