பொதுஇடங்களில் கட்சி கொடிகம்பம் வழக்கு: தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை:

பொது இடங்களில் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கு  தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர் பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் பொதுஇடங்களில் அரசியல் கட்சிகள், சமூதாய அமைப்புகள் கட்சிக்கொடி கம்பங்கள் அமைக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர்தாக்கல் செய்துள்ள மனுவில்,

பேருந்து நிலையம், சாலையோரம், தெருமுனைகள் போன்ற பொது இடங்களில் கட்சி கொடிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சியினர் மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்படும் சாலைகளை சேதப்படுத்தி கட்சி கொடி கம்பங்களை நடுவது தமிழ்நாடு பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும்,

சாலையோரங்கள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் நாட்டுவது தொடர்பான விதிகளை, மாவட்ட நிர்வாகங்களும், மாநில நெடுஞ்சாலை துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் அமல்படுத்துவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. சாலைகள் சேதப்படுத்தப்பட்டு கொடிக்கம்பங்கள் நடுவதால் அரசியல் கட்சியினரி டையே மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுமீதான விசாரணை,  நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் முரளிதரன் அடங்கிய அமர்வு முன்பு விசா ரணைக்கு வந்தது. அப்போது,  பொது இடங்களில் கட்சிக் கொடி கம்பங்கள் நட முழு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு 4 வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.