டில்லி

விமானப் பயணத்துக்கான போர்டிங் பாஸ் முறையை விமானத் துறை டிஜிட்டல் ஆக்கி உள்ளது.

பல வருடங்களாக விமானப் பயணம் செய்வோருக்கு போர்டிங் பாஸ் என்னும் விமான அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு வந்தது.   விமான பயணச்சீட்டை காட்டி சோதனைகளுக்குப் பின் இந்த அனுமதிச் சீட்டு வழங்கப்படும்.   விமானப்பயணி விமானத்தில் நுழையும் போது இந்த அனுமதிச்சீட்டின் ஒரு பகுதி கிழிக்கப்பட்டு விமான நிறுவனம் வைத்துக் கொள்ளும்.   மீதம் உள்ள பகுதியை பயணிகள் தங்கள் பயணம் முடியும் வரை வைத்துக் கொள்ள வேண்டும்.

இது குறித்து விமானத்துறை செயலர் சௌபே, “தற்போது அனைத்தும் டிஜிட்டல் முறை ஆக்கப்பட்டுள்ளது.   இன்னும் அச்சடிக்கப்பட்ட போர்டிங் பாஸ் முறை தேவை இல்லை என விமானத்துறை தீர்மானித்துள்ளது.   அதன்  படி இனி விமானப் பயணம் செய்வோருக்கான அனுமதிச் சீட்டு அவர்களின் மொபைலுக்கு அனுப்பப்படும்.   அதன் மூலமாகவோ அல்லது அவர்கள் ரேகை பதிவின் மூலமாகவோ அவர்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இதன் மூலம் அனுமதிச்சீட்டை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்னும் பொறுப்பு பயணிகளுக்கு மட்டும் இன்றி விமான நிறுவனங்களுக்கும் இருக்காது.   அனைத்து விவாங்களும் டிஜிட்டல் முறையில் பதிவாகி விடும்.  இம்முறை உடனடியாக அமுலுக்கு வருகிறது. ” என தெரிவித்துள்ளார்.