கொரோனா : விமானத்தில் ஏறும் போது பாதிப்பின்றி இறங்கும் போது பாதிப்பு

தென்ஸ்

விமானத்தில் பயணம் செய்த 12 பயணிகளுக்கு ஏறும் போது கொரோனா பாதிப்பு இல்லாமல் இறங்கும் போது பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது

விமானப் பயணிகள் விமானம் ஏறும் முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுப் பாதிப்பு இல்லாதோருக்கு மட்டும் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.   அதைப் போல் விமானத்தில் இருந்து இறங்கும் பயணிகளும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுப் பாதிப்பு உள்ளோர் தனிமை சிகிச்சைக்கு அனுப்பப்படுகின்றனர்.

கத்தார் நாட்டின் தலைநகர் தோகா நகரில் கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் நகருக்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் ஒன்று சென்றுள்ளது.   அதில் 91 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.  அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு யாருக்கும் பாதிப்பு இல்லை என கத்தார் ஏர்வேஸ் அறிவித்தது.

ஆனால் ஏதென்ஸ் நகரில் கொரோனா பரிசோதனை செய்த போது அவர்களில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.   இவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமை சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.  அத்துடன் பாதிப்பு இல்லாத மீதமுள்ள பயணிகள் 7 நாட்கள் தனிமையில் வைக்கப்பட்டு மீண்டும் பரிசோதனை செய்யப்பட உள்ளனர்.

கத்தார் ஏர்வேஸ் நிர்வாகம். ”அனைத்து பயணிகளும் பரிசோதனை செய்யப்பட்டுப் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.  இந்த 12 பேரும் கத்தாரில் இருந்து பயணம் செய்தவர்கள் இல்லை.   அனைவரும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கத்தார் மூலம் பயணம் செய்யும் வெளி நாட்டவர்கள் ஆவார்கள்.

இதில் ஒருவர் ஜப்பானில் இருந்து வந்த கிரீஸ் நாட்டவர், இருவர் ஆஸ்திரேலியாவில் இருந்து  வந்த கிரீஸ்  நாட்டவர்கள், 9 பேர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள்.  இவர்கள் பாகிஸ்தானில் இருந்து கத்தார் மூலம் கிரீஸ் சென்றுள்ளனர்.  இவர்களுக்கு கிரீஸ் நாட்டில் வசிக்கும் உரிமம் வழஙகப்பபட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

இதையொட்டி கிரீஸ் அரசு கத்தாரில் இருந்து வரும் அனைத்து விமானங்களையும் கத்தாருக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் ஜூன் 15 வரை ரத்து செய்துள்ளது.