டெல்லி: அரசு உத்தரவுக்கு பின்னரே உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளுக்கான முன்பதிவு துவங்கப்படும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 2ம் கட்டமாக மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஏப்ரல் 20க்கு பின்னர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து ஏனைய பகுதிகளில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.

ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகள், போக்குவரத்து மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. ரயில், விமானம், சாலை உள்ளிட்ட பொதுப்போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. விமான டிக்கெட் முன்பதிவை தற்போது தொடங்க கூடாது என அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால் சில தனியார் விமான நிறுவனங்கள் , முன்பதிவு சேவையை தொடங்கியுள்ளன. இந் நிலையில், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகைகள  இயக்குவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது ட்விட்டரில் தெளிவுபடுத்தி உள்ளார்.

சில விமான நிறுவனங்கள் எங்கள் ஆலோசனையை பின்பற்றவில்லை. முன்பதிவுகளை ஆரம்பித்துள்ளது.  அவர்களுக்கு ஏப்ரல் 19ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்பதிவு தொடங்குவதற்கு அவர்களுக்கு போதுமான அறிவிப்பு மற்றும் நேரம் வழங்கப்படும் என்று அவர் கூறி உள்ளார்.