ஆன்லைனில் போன் வாங்கி ஏமாந்த நடிகர் நகுல்

சென்னை

பிரபல தமிழ் நடிகர் நகுல் ஆன்லைன் மூலம் ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள ஐபோனுக்கு ஆர்டர் செய்து அதற்கு பதிலாக போலி பிளாஸ்டிக் போன் அனுப்பப்பட்டுள்ளது.

பிரபல நடிகை தேவாயானியின் தம்பி நடிகர் நகுல். இவர் பாய்ஸ் என்னும் படத்தில் 5 கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகம் ஆனவர். அதன் பிறகு காதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றுள்ளார். தற்போது அவர் எரியும் கண்ணாடி என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் நகுலும் ஸ்ருதி என்னும் பெண்ணும் திருமணம் செய்துக்கொண்டனர். திருமண நாளை ஒட்டி நகுல் தனது மனைவிக்கு பரிசு அளிக்க விரும்பினார். அதனால் ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மூலம் ரூ.1.25 லட்சம் விலையில் ஐபோன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இவர் வெளிப்புற படப்பிடிப்பு சென்ற போது இந்த ஐபோன் அவர் வீட்டில் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

வீடு திரும்பிய நகுல் அந்த பார்சலை ஆர்வத்துடன் பிரித்துப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த பார்சலில் ஒரு போலி பிளாஸ்டிக் போன் இருந்துள்ளது. நகுல் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த தகவலை நகுல் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். பிரபல நடிகரிடமும் ஆன்லைன் நிறுவனங்கள் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.