கேரளாவுக்கு மேலும் கூடுதல் நிதி வழங்கப்படும்: மத்திய அரசு

டில்லி:

ழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ள கேரள மாநிலத்துக்கு மேலும் தேவையான நிதிஉதவிகள் அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

கேரள வெள்ள நிவாரணத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் முதல்கட்டமாக 100 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுவதாக கூறியிருந்த நிலையில், பிரதமர் மோடி வெள்ளச்சேதத்தை பார்வையிட்டதை தொடர்ந்து மேலும் 500 கோடி நிவாரண நிதி அளிப்பதாக கூறினார். கேரளவுக்கு இதுவரை வெள்ள நிவாரண நிதியாக ரூ.600 கோடி மத்திய அரசு வழங்கி உள்ளது.

இதற்கிடையில், அரபு நாடுகள், தாய்லாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்தும் கேரளாவுக்கு நிவாரண நிதிகள் குவிந்து வருகிறது. இந்த நிதிகளை  ஏற்க மத்தியஅரசு மறுப்பு தெரிவித்து உள்ளது. இதை கேரள மாநில அரசு சர்ச்சையாக்கி வருகிறது.

இந்த நிலையில், கேரள வெள்ளம் தொடர்பாக மோடி தலைமையில் மத்திய அமைச்சக அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதில், கேரள வெள்ளப்பாதிப்புக்காக மத்திய அரசு வழங்கியுள்ள ரூ.600 கோடி நிதி முதல்கட்டம்தான்,  மேலும் உதவிகள் வழங்கப்படும் கூடுதலான நிதியுதவி அளிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

வெள்ளச்சேதம் குறித்து தேசியப் பேரிடர் மீட்புக் குழு மற்றும் அமைச்சர்கள் குழு ஆகியவை ஆய்வு செய்து, முழுமையான அறிக்கை வரும்போது, மேலும் தேவையான நிதியை அளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.