டில்லி, அரியானா மாநிலங்களில் வெள்ள எச்சரிக்கை! இமாச்சலில் 22 பேர் பலி

டில்லி:

ட மாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக டில்லி, அரியானா மாநிலங்களில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மழை வெள்ளம் காரணமாக இமாச்சல பிரதேசத்தில் 28 பேர் பலியாகி உள்ளதாகவும், 22 பேர் மாயமாகி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் உத்தரகாண்டிலும் கனத்த மழை பெய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பருவமழை தீவிரமடைந்திருப்பதால் வடமாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட்,  மகாராஷ்டிரா, உ.பி.  குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் , அரியானா டெல்லி  உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லியிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மலைப்பிரதேசங்களான உத்தரகாண்ட், இமாச்சலில் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருப்பதால் முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மழை, வெள்ளம், நிலச்சரிவால் இமாச்சலில் 22 பேரும், உத்தரகாண்டில் 25 பேரும் பலியான நிலையில், வெள்ளச்சேதமும் அதிகரித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மீட்புப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

அரியானா:

அரியானா மாநிலத்தில் ஓடும் யமுனா ஆற்றின் ஹாத்தினி குண்ட் சரமாரியில் இருந்து 8.14 லட்சம் கியூசெக் தண்ணீர் விடுவிக்கப்பட்டதால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக  மீட்பு பணியில் இந்திய இராணுவம் தயாராக இருக்கும்படி மாநில  அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி,   யமுனா நதியில் உள்ள  203.37 மீட்டர் வேகத்தில் தண்ணீர் பாய்கிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அடுத்த 24 மணி நேரத்தில் இந்த அளவு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி:

தலைநகர் டில்லியிலும் பலத்த மழை கொட்டி வருகிறது. நேற்று அங்கு ( ஆகஸ்ட் 18 ம் தேதி) அதிகபட்ச வெப்பநிலை 29.7 டிகிரி செல்சியஸாக, பருவத்தின் சராசரியை விட நான்கு புள்ளிகள் குறைவாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24.8 டிகிரி செல்சியஸாகவும், பருவத்தின் சராசரியை விட இரண்டு புள்ளிகள் குறைவாகவும் இருந்தது. அங்குள்ள யமுனா நதியில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் ஓடுவதால் டில்லி பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கெஜ்ரிவால் அரசு  கேட்டுக் கொண்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தங்கு வதற்கு அருகிலுள்ள பகுதிகளில் கூடாரங்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும  கூறப்படடுள்ளது.

டில்லியின் தென்கிழக்கு மாவட்டம் போன்ற சில பகுதிகளில், மக்களை வெளியேற்றும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இன்றும் இடியுடன் கூடிய கனமழை கொட்டும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

உத்தரபிரதேசம்:

உத்தரபிரதேசத்தில் பெய்து வரும் மழை காரணமாக, அங்குள்ள  கங்கா, யமுனா, கக்ரா உள்ளிட்ட பல ஆறுகள் நிரம்பி வழிகின்றன. படான், கர்முக்தேஷ்வர், நாரயுரா மற்றும் ஃபாருகாபாத் ஆகிய இடங்களில் கங்கை நதியில் எச்சரிக்கை  அடையாளத்தை தாண்டி வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

அதுபோல  பாலியாகலனில் உள்ள ஷார்தா நதி, எல்ஜின் பாலத்தில் உள்ள கக்ரா நதியிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அங்கு அபாய குறியீட்டை தாண்டி தண்ணீர் போவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட்:

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாஷி மாவட்டத்தின் மோரி தொகுதியில் இன்றும் மேக மூட்டங்களுடன் மழை பெய்து வருவதால்,  பல கிராமங்களில் அழிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்குள்ள அரகோட், மகுரி மற்றும் டிக்கோச்சி கிராமங்களில் பல வீடுகள் மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இமாச்சல பிரதேசம்:

கனமழை காரணமாக சிம்லா, குலு, பிலாஸ்பூர் மற்றும் சோலன் மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். முன்னதாக,  சிம்லா மற்றும் சம்பா மாவட்ட நீதிபதிகள் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஐடிஐக்கள், பாலிடெக்னிக் மற்றும் அங்கன்வாடி வாரி மையங்களுக்கு மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விடுமுறை விடும் உத்தரவு பிறப்பித்தனர்.

மாநிலத்தில் பண்டோ மற்றும் நாத்பா ஜாக்ரி அணைகள் நிரம்பிய நிலையில், அங்கிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், பியாஸ் மற்றும் சட்லெஜ் நதிகளில்  வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

பஞ்சாப்:

பஞ்சாப், அரியானா மாநிலங்களில் நேற்றும் மழை கொட்டிய நிலையில், அங்கு பல இடங்களில் வெள்ளநீர் புகுந்தது. பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில்  பியாஸ் ஏரி நிரம்பி வழிவதால், அங்குள்ள கிராமத்தில் வெள்ளம் புகுந்தது. பாதிக்கப்பட்ட கிராமத்தில் இருந்து  11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான்:

ராஜஸ்தான் மாநிலத்தில் மழை சற்று ஒய்வடைந்துள்ள நிலையில், ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு குறையத் தொடங்கி உள்ளது.  கடந்த சில நாட்களாக மாநிலத்தின் சில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சில மாநிலங்களில்  இன்னும் சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதால், இமாச்சல், உத்தரகாண்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

கங்கை, யமுனை மற்றும் காக்ரா ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராமங்கள் பல வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.  பல இடங்களில் 7 ஆற்றுப்பாலங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்தும் முடங்கியுள்ளது.